அனுமதியின்றி எம்ஜிஎம் மருத்துவமனை கட்டுமானப் பணி.. சென்னை மாநகராட்சிக்கு ரூ 5 லட்சம் அபராதம்
சென்னை: திட்ட அனுமதியின்றி கட்டுமானம் மேற்கொண்ட எம்ஜிஎம் தனியார் மருத்துவமனைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள செயின்ட் மேரீஸ் சாலையில் 10 மாடியில் கட்டப்பட்டுவரும் எம்.ஜி.எம் மருத்துவமனை கட்டுமான பணியில் ஆழ்துளை அஸ்திவாரம் அமைக்கும் பணி காரணமாக, சுற்றுப்புற பகுதியில் கடுமையான ஒலி மாசு ஏற்படுவதாக சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபாலன் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, கட்டிடம் கட்டுவதற்கான அனுமதி தரப்படவில்லை எனவும், உரிய கட்டணம் செலுத்தும்பட்சத்தில் திட்ட அனுமதி வழங்கப்படும் என சி.எம்.டி.ஏ. தரப்பில் தெரிவிக்கபட்டிருந்தது.
இதையடுத்து, எம்ஜிஎம் மருத்துவமனை கட்டுமானப் பணிகளை தொடர்வதற்கு இடைக்கால தடைவிதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியம் மற்றும் ஆர்.சக்திவேல் அமர்வில் கடந்த 12 ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, திட்ட அனுமதி இல்லாமல் கடந்த ஜூலை முதல் கட்டுமான பணிகளை மேற்கொள்ள எப்படி அனுமதிக்கபட்டது என சிஎம்டிஏ-வுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த கூடுதல் தலைமை வழக்கறிஞர், சட்டவிரோத கட்டுமானங்களை கண்காணிக்க வேண்டியது மாநகராட்சி பொறுப்பு தான் என தெரிவித்தார்.
இதையடுத்து தாமாக முன்வந்து சென்னை மாநகராட்சி ஆணையரை எதிர்மனுதாரராக சேர்த்த நீதிபதிகள், கட்டிட அனுமதி பெறாமல் கட்டுமான பணிகளை மேற்கொள்பவர்களுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது என்பது குறிது விளக்கமளிக்க உத்தரவிட்டனர்.
மேலும், கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் போது, ஏற்படும் ஒலி மாசுவை கண்காணிக்க ஏதேனும் நடைமுறை உள்ளதா? இல்லையா? என்பது குறித்து அறிக்கையில் சுட்டிக்காட்டாத தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மீது அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், இதுபோன்ற நடைமுறைகள் உள்ளதா? இல்லையா? என்பது குறித்து மற்றொரு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை பிப்ரவரி 27ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
அந்த வகையில் இன்றைய தினம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது திட்ட அனுமதியின்றி கட்டுமானம் மேற்கொண்ட எம்.ஜி.எம். மருத்துவமனைக்கு ஹைகோர்ட் அபராதம் விதித்துள்ளது. சென்னை மாநகராட்சி, சி.எம்.டி.ஏ., மாசு கட்டுப்பாட்டு வாரியம், எம்.ஜி.எம். மருத்துவமனைக்கு ரூ. 32 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி, சி.எம்.டி.ஏ.வுக்கு தலா ரூ. 5 லட்சம், மாசு கட்டுப்பாட்டு வாரியம் ரூ. 2 லட்சம் என அபராதம் விதிக்கப்பட்டது. இந்த அபராதத் தொகையை சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு செலுத்துமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications