ஓபிஎஸ் டீம் ஒரு விநோதமான வாதத்தை வச்சாங்க பாருங்க.. நீதிபதிகளே ஏத்துக்கல.. தீர்ப்பு பற்றி இன்பதுரை!
சென்னை: அதிமுக கொடி அதிமுகவுக்கே சொந்தமில்லை என ஓபிஎஸ் தரப்பு முன்வைத்த விநோதமான வாதத்தை நீதிபதிகள் ஏற்கவில்லை என எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர் இன்பதுரை கூறியுள்ளார்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், அதிமுக கட்சியின் பெயர், சின்னம், கொடி மற்றும் லெட்டர் பேட் ஆகியவற்றை தொடர்ந்து பயன்படுத்தி வருவதாகவும், அதிமுக பொதுச்செயலாளராக தன்னை தேர்தல் ஆணையமும், உயர்நீதிமன்றமும் அங்கீகரித்துள்ள நிலையில், ஓபிஎஸ் இவ்வாறு செயல்படுவது தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும். இதனால் அதற்கு தடை விதிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி, ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

எடப்பாடி பழனிசாமி மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி, கட்சியின் பெயர், கொடி, சின்னம் உள்ளிட்டவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். இதன் பின், தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த சூழலில், தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ஓபிஎஸ் தாக்கல் செய்ய மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அதிமுக கொடி, சின்னம், லெட்டர் ஹெட் உள்ளிட்டவற்றை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை விதித்தது செல்லும் என தீர்ப்பு வழங்கி, முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.
இந்த தீர்ப்பு மூலம், தனி நீதிபதி தீர்ப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், அதிமுக கொடி, சின்னம் உள்ளிட்டவற்றை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை தொடரும். மேலும், சம்பந்தப்பட்ட தனி நீதிபதியை அணுகி நிவாரணம் பெற நீதிபதிகள் மகாதேவன், முகமது ஷபீக் அமர்வு அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், இந்த தீர்ப்பு குறித்து எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர் இன்பதுரை செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கினார். அப்போது பேசிய இன்பதுரை, "அதிமுக கொடி, சின்னத்தை ஓபிஎஸ் பயன்படுத்த தனி நீதிபதி தடை விதித்த நிலையில், அந்த தடையை எதிர்த்து ஓபிஎஸ் வகையறாக்கள் டிவிஷன் பெஞ்ச் முன்பாக மேல்முறையீடு செய்தனர்.
அப்போது அதிமுக கொடி அதிமுகவுக்கே சொந்தமில்லை என ஓபிஎஸ் தரப்பு வாதாடியது. அதிமுக அலுவலகம், அறக்கட்டளைக்கு சொந்தமானது என்ற புது வாதத்தையும் வைத்தனர். ஓபிஎஸ் முன்வைத்த இந்த விநோதமான வாதத்தை நீதிபதிகள் ஏற்கவில்லை.
அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக வழக்கு போட்டு சுப்ரீம் கோர்ட் வரை சென்று தோற்றுத் திரும்பினார்கள். அதிமுக கட்சி விதிகள் பற்றி வழக்கு போட்டார்கள். பொதுக்குழுவே கூட்டக்கூடாது என்று ஒரு வழக்கு, பொதுக்குழு தவறு என்று வழக்கு போட்டார்கள். பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக வழக்கு போட்டார்கள். அது ஜனவரி 19ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் வரவுள்ளது.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்பதை தேர்தல் ஆணையமே அங்கீகரித்த பின்பு, கொடி, சின்னத்தை ஓபிஎஸ் பயன்படுத்தக் கூடாது. அப்படித்தான் நாங்கள் வழக்குப் போட்டோம். இப்போது அது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஓபிஎஸ் அப்பீல் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
ஓ.பன்னீர்செல்வத்தின் நோக்கமே அதிமுக நல்லா இருக்கக்கூடாது, நாசமாக போய்விட வேண்டும் என்பதுதான். அதில் ஒன்று தான் அவர் அதிமுக கொடி, சின்னத்தை பயன்படுத்துவது. எல்லா இடங்களிலும், ஓபிஎஸ் தரப்பினர் கட்சி கொடி, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்தக்கூடாது என போலீசில் மனு அளித்துள்ளோம்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications