‘பிசாசு 2’ படத்தை வெளியிட இடைக்கால தடை.. மிஷ்கினுக்கு புதிய சிக்கல்.. சென்னை ஹைகோர்ட் அதிரடி
சென்னை: மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு - 2 திரைப்படம் உருவாகி உள்ளது. இந்த படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக இடைக்கால தடை விதித்துள்ளது. இதனால் இயக்குநர் மிஷ்கினுக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் மிஷ்கின். இவர் கடந்த 2014ம் ஆண்டில் ‛பிசாசு' என்ற பெயரில் திரைப்படத்தை இயக்கினார். திகில் படமான இதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. ‛பிசாசு' திரைப்படம் வெற்றியும் பெற்றது.

இதையடுத்து மிஷ்கின் ‛பிசாசு 2' திரைப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனத்தை மிஷ்கின் எழுதி இயக்கி உள்ளார். ‛பிசாசு' திரைப்படத்தின் தொடர்ச்சியாக இந்த திரைப்படம் உருவாகி உள்ளது. இந்த படத்தில் நடிகை ஆண்ட்ரியா, நடிகர் விஜய் சேதுபதி, நடிகை பூர்ணா உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.
கார்த்திக் ராஜா இசையமைத்துள்ள நிலையில் திரைப்படத்தை ராக்போர்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்த திரைப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. தமிழ் மட்டுமின்றி பிற மொழி படங்களிலும் இந்த திரைப்படம் வெளியாக உள்ளது.
இதற்கிடையே தான் பிசாசு 2 திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இதனால் மிஷ்கினுக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த இடைக்கால தடைக்கு முக்கிய காரணம் பிசாசு 2 திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் தான்.
அதாவது படத்தை தயாரித்துள்ள ராக்போர்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இரண்டாம் குத்து திரைப்படத்தின் விநியோக உரிமையை பெற்றிருந்தது. இதுதொடர்பாக இரண்டாம் குத்து திரைப்பட தயாரிப்பு நிறுவனம் பிளையிங் ஹார்ஸ் பிச்சர்ஸ் உடன் ராக்போர்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் ஒப்பந்தம் செய்திருந்தது.
ஆனால் ஒப்பந்தத்தின்படி ராக்போர்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனம், பிளையிங் ஹார்ஸ் பிச்சர்ஸ் நிறுவனத்துக்கு ரூ.4 கோடியே 85 லட்சத்தில் ரூ.2 கோடி வரை பாக்கி வைத்துள்ளது. இதனை திரும்ப கொடுக்கவில்லை. ஆனாலும் தொடர்ந்து ராக்போர்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் புதிய படங்களை தயாரித்தது. குருதி ஆட்டம், மன்மத லீலை ஆகிய படங்களை ராக்போர்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்தது.
இந்த படங்களுக்கு தடை விதிக்க கோரிய வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மத்தியஸ்தரை நியமித்தது. அதன்படி விசாரணை நடத்திய மத்தியஸ்தர், ஒரு கோடியே 17 லட்சத்து 15 ஆயிரத்து 552 ரூபாயும், ஜிஎஸ்டி ஆக 31 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயும் வழங்க ராக்போர்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்திற்கு உத்தரவிட்டார். மத்தியஸ்தர் உத்தரவுப்படி பணத்தை வழங்காமல் ராக்போர்ட் நிறுவனம் பிசாசு 2 படத்தை தயாரித்து வெளியிட உள்ளதாக பிளையிங் ஹார்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் மனு செய்தது.
இந்த மனுவில், மத்தியஸ்தர் பிறப்பித்த உத்தரவின் படி, வட்டியுடன் சேர்த்து, ஒரு கோடியே 84 லட்சத்து 43 ஆயிரத்து 794 ரூபாய் செலுத்தும் வரை பிசாசு 2 படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி 'பிசாசு 2' திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். மேலும் மனுவுக்கு நவம்பர் 18ம் தேதிக்குள் பதிலளிக்கும் படி ராக்போர்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications