எடப்பாடி பழனிசாமிக்கு என்ன உடம்பு சரியில்லையா? மேத்யூ சாமுவேல் தரப்பு வாதம்.. ஐகோர்ட் அதிரடி ஆர்டர்!
சென்னை: தனக்கு எதிரான அவதூறு வழக்கில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க விலக்கு பெற்ற உத்தரவை எதிர்த்து, பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி வீடியோ வெளியிட்ட டெல்லியை சேர்ந்த பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல், வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோருக்கு எதிராக 2019ஆம் ஆண்டு தற்போது அதிமுக பொதுச் செயலாளராக உள்ள எடப்பாடி பழனிசாமி, ஒரு கோடியே 10 லட்ச ரூபாய் மான நஷ்ட ஈடு கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில் சாட்சியங்களை பதிவு செய்வதற்காக வழக்கை மாஸ்டர் நீதிமன்றத்திற்கு அனுப்பிவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க இயலாது எனவும், தமது வீட்டில் சாட்சியத்தை பதிவு செய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமிக்க வேண்டும் எனவும் கோரி எட்பபாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவை ஏற்ற உயர் நீதிமன்றம், நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க எடப்பாடி பழனிசாமிக்கு விலக்கு அளித்ததோடு, இந்த நடைமுறையை அவரது வீட்டில் மேற்கொள்வதற்காக வழக்கறிஞர் ஆணையராக எஸ்.கார்த்திகை பாலனை நியமித்தது. இந்த உத்தரவை எதிர்த்து சாமுவேல் மேத்யூ சாமுவேல் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷஃபிக் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ ஆஜராகி, உடல் நலக்குறைவு உள்ளிட்ட காரணங்களால் தான் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க முடியும் என தெரிவித்தார். மேலும், மத்திய தொழிலக பாதுகாப்பின் கீழ் சென்னை உயர் நீதிமன்றம் வருவதால் எதிர்க்கட்சி தலைவருக்கான பாதுகாப்பு நடைமுறையை காரணமாக கூற முடியாது எனவும் வாதிட்டார்.
அப்போது, சாட்சியம் பதிவு செய்யப்பட்டுவிட்டதா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பிபோது, எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் எஸ்.ஆர்.ராஜகோபால், இன்னும் தொடங்கவில்லை என விளக்கம் அளித்தார். இதனையடுத்து, இந்த மனு குறித்து எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை டிசம்பர் 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.












Click it and Unblock the Notifications