தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் உழவார பணி..திட்டம் வகுக்க அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில், உழவார பணிகளை மேற்கொள்வதற்கான திட்டத்தை வகுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் ஏராளமான கோவில்கள் உள்ளன. கோவில்களில் தூய்மை பணிகள் மற்றும் உழவார பணிகளும் மேற்கொள்ளப்படுகிறது. இதில் மக்களும் பங்கேற்று சேவைகளை செய்வார்கள். இந்நிலையில் தான் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது.

தமிழகத்தில் பழமையான பாரம்பரியம் மிக்க கோவில்களில் துய்மைப்பணிகள் மற்றும் பொதுமக்கள் பங்கெடுக்கும் வகையில் உழவாரப்பணிகளை மேற்கொள்ள அனுமதி மறுக்கப்படுவதை எதிர்த்து சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் கார்த்திகேயன், என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி, மகாதேவன், நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது, அப்போது மனுதாரரான கார்த்திகேயன் நேரில் ஆஜராகி,கோவில்களில் உழவார பணிகள் மேற்கொள்ள அரசு அனுமதி மறுப்பதால், பல பாரம்பரியமான கோவில்கள் பாழடைந்த நிலையில் இருப்பதாக தெரிவித்தார்.
குறிப்பாக, திருக்கருங்குடி நாதர் திருக்கோவில், மருதநல்லூர், கும்பகோணம் கோவில், தெப்பக்குளங்கள், மகாபலிபுரத்தில் உள்ள ஸ்தலசயன பெருமாள் கோவில் தெப்பக்குளம் பகுதிகள் பராமரிப்பு இல்லாமல் இருப்பதற்காக புகைப்பட ஆதரங்கள் கொடுக்கப்பட்டது. இதை பதிவு செய்த நீதிபதிகள், தமிழக முழுவதும் உள்ள கோவில்களில் பொதுமக்கள் பங்கேற்கும் வகையில் உழவார பணிகள் மேற்கொள்ள திட்டத்தை வகுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.
அதே போல், இந்து அறநிலைய துறையின் கீழ் உள்ள 267 பாடல் பெற்ற ஸ்தலம், 183 வைபவ ஸ்தலம், 84 வைணவ ஸ்தலங்களை ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில், குழு அமைத்து, மாவட்ட நீதிபதி அல்லது மாவட்ட துணை நீதிபதிகளுடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டு அது குறித்த ஆய்வறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். இந்த உத்தரவுகள் அனைத்தையும் 2 வாரத்திற்குள் நடைமுறைப்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.












Click it and Unblock the Notifications