"மாஃபியா கும்பல்..." ஐபிஎல் டிக்கெட்கள் குறித்த வழக்கு.. சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு
சென்னை: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் ஐ.பி.எல். போட்டிகளுக்கான டிக்கெட்களை கள்ளச் சந்தையில் விற்பனை செய்வதற்கு எதிராக அளித்த புகார் மனுவைப் பரிசீலிக்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இப்போது ஐபிஎல் போட்டிகள் சூடுபிடித்துள்ளன. லீக் போட்டிகள் பாதி முடிந்துவிட்ட நிலையில், ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேற பல்வேறு அணிகளும் ஆர்வம் காட்டி வருகின்றன. இந்த சீசன் சிஎஸ்கே அணிக்கு இதுவரை சுமாராகவே இருந்துள்ளது.

டிக்கெட்கள்: சென்னை அணி இதுவரை 8 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், அதில் 4இல் வென்று புள்ளி பட்டியலில் 5ஆவது இடத்தில் இருக்கிறது. அதேநேரம் சிஎஸ்கே போட்டியை நேரில் பார்க்கக் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் சேப்பாக்கத்தில் நடக்கும் போட்டிகளுக்கு டிக்கெட் பெறுவதே குதிரைக் கொம்பாக இருக்கிறது.
வழக்கு: இதற்கிடையே சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்ததிருந்தார். அதில் அவர், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளைக் காண நியாயமான கட்டணத்தில் டிக்கெட் பெறுவது இமாலய இலக்காக உள்ளது எனக் கூறியுள்ளார்.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், ஆன்லைன் மூலம் டிக்கெட்களை விற்கிறது. ஆனால் விற்பனை துவங்கிய சிறிது நேரத்திலேயே டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்து விடுகின்றன. சில சமூக விரோதிகள், டிக்கெட்களை மொத்தமாக வாங்கி, அதனை 10 மடங்கு அதிக விலைக்குக் கள்ளச்சந்தையில் விற்கின்றனர் என, மனுவில் குற்றம் சாட்டியுள்ளார்.
மாபியா கும்பல்: குறைந்த கட்டண டிக்கெட்கள் கூட, 14 ஆயிரம் முதல் 16 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படுகின்றன. டிக்கெட்களை வாங்கி அதிக விலைக்கு விற்பதன் பின்னணியில், மாபியா கும்பல் இயங்கி வருகிறது எனத் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில், ஐ.பி.எல். டிக்கெட்களை கள்ளச் சந்தையில் விற்ற ஐந்து பேரைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து எட்டு டிக்கெட்களும், 31 ஆயிரத்து 500 ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதனால், இந்த மாபியா கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன், விதிகளை மீறிச் செயல்படும் சேப்பாக்கம் மைதான அதிகாரிகளுக்கும், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க அதிகாரிகளுக்கும் எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.
உத்தரவு: இந்த மனு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, கள்ளச் சந்தையில் டிக்கெட்கள் விற்பனை செய்வது தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, விளையாட்டுப் போட்டிகள் முடியும் நேரத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாகக் கூறிய நீதிபதிகள், மனுதாரரின் கோரிக்கை மனுவைப் பரிசீலித்து முடிவெடுக்கும்படி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துக்கும் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications