போராட்டம் நடத்தினால் முதலீடு எப்படி வரும்? நாடு எப்படி முன்னேறும்? சென்னை ஐகோர்ட் கேள்வி
சென்னை: பிரதமரும், தமிழக முதல்வரும் எங்கள் நாட்டில் தொழில் தொடங்க வாருங்கள் என்று அழைக்கும் போது, நீங்கள் இவ்வாறு போராட்டம் நடத்தினால் யார் முதலீடு செய்ய வருவார்கள் என்று ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருக்கிறது.
காஞ்சிபுரம் இருங்காட்டு கோட்டியில் உள்ள ஹூண்டாட் மோட்டார்ஸ் நிறுவனம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், தங்களது நிறுவனம் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமாகும். ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்தில் நேரடியாகவும், மறைமுகமாகும் 14,600 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். தங்களின் ஊழியர்களுக்கு நல்ல ஊதியம் வழங்கி வருகிறோம்.

இந்த நிலையில் ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்திய தொழிலாளர் சங்கம் நிறுவனத்திற்கு எதிராக போராட்டத்தை நடத்தியது. இதன் காரணமாக 64 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஸ்ரீபெரும்புதூர் நடுவர் நீதிமன்றத்தில், இந்த சங்க ஊழியர்கள் சட்டவிரோதமாக வேலை நிறுத்தம், போராட்டம், கூட்டம் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடரப்பட்டது.
அதில் நிறுவனத்திற்கு உள்ளேயோ அல்லது நிறுவனத்தை சுற்றி 500 மீட்டர் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் யாரும் போராட்டம் நடத்தக் கூடாது என்று தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் தடை உத்தரவை மீறி நிறுவன ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்படி போராட்டத்தில் ஈடுபடுவதால், தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். இதனால் தொழிற்சங்க ஊழியர்கள் போராட்டம் நடத்த விதிக்கப்பட்ட தடையை அமல்படுத்த வேண்டும் என்று கேட்டு கொள்ளப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நிறுவன தரப்பிலும், தொழிற்சங்க தரப்பில் வாதங்கள் முன் வைக்கப்பட்டன. இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி வேல்முருகன், பிரதமரும், தமிழக முதல்வரும் எங்கள் நாட்டில் தொழில் தொடங்க வாருங்கள் என்று அழைக்கும் போது, நீங்கள் இவ்வாறு போராட்டம் நடத்தினால் யார் முதலீடு செய்ய வருவார்கள்? நாடு எப்படி முன்னேறும்? என்றும் கேள்வி எழுப்பினார். இதன்பின் வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications