கல்வராயன் மலை பகுதிக்கு முதல்வரோ அமைச்சர் உதயநிதி ஸ்டாலினோ செல்ல வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி!
சென்னை: தமிழக முதலமைச்சர் அல்லது விளையாட்டுத் துறை அமைச்சர், ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சருடன் கல்வராயன் மலைப் பகுதிக்குச் சென்று பார்வையிட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் ஆலோசனை தெரிவித்துள்ளது.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 67 பேர் மரணமடைந்த சம்பவத்தைத் தொடர்ந்து, கள்ளச்சாராய உற்பத்தி மையமாகச் செயல்படும் கல்வராயன் மலைப்பகுதி மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு நடவடிக்கை எடுப்பது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகி, இந்த வழக்கும், சிபிஐ விசாரணை கோரிய வழக்கும் ஒன்றல்ல என நினைப்பதாக தெரிவித்தார்.
அதற்கு நீதிபதிகள், அந்த வழக்குக்கும், இதற்கும் சம்பந்தமில்லை. இந்த வழக்கு கல்வராயன் மலைப்பகுதி மக்களின் சமூக பொருளாதாரம் சார்ந்தது. மேலும், ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பு கொண்ட மற்றும் 95 சதவீதம் பழங்குடி மக்கள் வசிக்கும் கல்வராயன் மலைப்பகுதி கடந்த 1976ஆம் ஆண்டில் தான் இந்தியாவுடன் இணைக்கப்பட்டிருக்கிறது. கடந்த 1996ஆம் ஆண்டு முதல் தான் அப்பகுதி மக்களுக்கு வாக்குரிமை கிடைத்து இருக்கிறது. அந்தப் பகுதி மக்கள் மிகவும் பின்தங்கியுள்ளனர் எனக் குறிப்பிட்டனர்.
மேலும், கல்வராயன் மலைப்பகுதியில் வாழும் மக்களின் தற்போதைய நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அரசுத் தலைமை வழக்கறிஞரிடம் தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட வழக்கறிஞர் தமிழ்மணி, அரசு அதிகாரிகள் அரசைப் பாதுகாக்கும் வகையில் அறிக்கை அளிப்பார்கள் என அச்சம் தெரிவித்தார்.
மேலும், அந்த பகுதியில் பேருந்து வசதியில்லை. மருத்துவமனைகள் இல்லை, கர்ப்பிணிகளை 40 கிலோ மீட்டர் தூரத்துக்கு தோளில் சுமந்து செல்கின்றனர் என தெரிவித்தார். இதையடுத்து, உண்மை தகவல்களை அறிக்கையாக அளிப்பதை உறுதி செய்ய நீதிமன்றத்துக்கு உதவியாக வழக்கறிஞர் தமிழ்மணியை நியமித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், கடந்த 1996ஆம் ஆண்டு முதல் கல்வராயன் மலைப்பகுதி மக்களின் வாக்குகளைப் பெற்ற அரசுகள், அந்த மக்களுக்கு அடிப்படை வசதிகள் வழங்கியிருக்கிறதா? இல்லையா? இதை கவனிப்பது அரசின் அரசியலமைப்புச் சட்ட கடமை அல்லவா எனத் தெரிவித்த நீதிபதிகள், அந்த மக்களுக்கான அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்து என்னென்ன நடவடிக்கைகளை எடுக்கலாம் என கண்டறிய வேண்டும் என குறிப்பிட்டனர்.
கல்வராயன் மலைப்பகுதி மக்களின் தற்போதைய நிலை என்ன? அங்கு வசிக்கும் பட்டியலின, பழங்குடி மக்களுக்கான அரசு சலுகைகள் சென்றடைந்துள்ளனவா? அந்த பகுதி மக்கள் நலனுக்காக எடுத்த நடவடிக்கைகள் என்ன? என ஜூலை 24ஆம் தேதி விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம். சுப்ரமணியம், சி.குமரப்பன் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் நீதிமன்றத்திற்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர் தமிழ்மணி சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ். ராமன், கல்வராயன் மலைப்பகுதி மக்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்த கள்ளக்குறிச்சி மற்றும் சேலம் மாவட்ட ஆட்சியர்களின் அறிக்கைகள் தயாராகி வருவதாகவும், நாளை மறுநாள் அதனை தாக்கல் செய்வதாகவும் கூறினார்.
இதனை ஏற்று வழக்கு விசாரணையை ஜூலை 26 ஆம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், கள்ளச் சாராயம் மட்டுமே அந்த பகுதி மக்களின் ஒரே ஆதாரமாக உள்ள நிலையில் அதனை ஒழிக்கும் பட்சத்தில் அப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்திற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றனர்.
கல்வராயன் மலைப்பகுதியாக உள்ளதால் அந்த பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தினர். அந்த பகுதி மக்களுக்கு உடனடி தேவையான மருத்துவம், கல்வி, போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தர வேண்டுமெனவும் நீதிபதிகள் கூறினர்.
அந்த பகுதிக்கு தாங்கள் செல்வதை விட, தமிழக முதலமைச்சர் ஆதி திராவிடர் நலத் துறை அமைச்சருடன் சென்று பார்வையிட்டால் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்கள், அந்த பகுதி மக்களுக்கு ஏதேனும் நன்மை விளையும் எனத் தெரிவித்தனர்.
அவ்வாறு தமிழக முதலமைச்சரால் செல்ல முடியவில்லை என்றால் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சருடன் சென்று பார்வையிடலாம் எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்து உள்ளனர்.












Click it and Unblock the Notifications