தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி சிக்கிய விவகாரம்.. கேசவ விநாயகம் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணை
சென்னை: லோக்சபா தேர்தல் சமயத்தில் தாம்பரம் ரயில்வே ஸ்டேஷனில் ரூ.4 கோடி பணம் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில் வழக்கு விசாரணைக்குத் தடை கோரி தமிழக பாஜக அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.
நாடு முழுக்க இந்தாண்டு மொத்தம் ஏழு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெற்றது. தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதலாம் கட்டத்திலேயே லோக்சபா தேர்தல் நடந்து முடிந்தது.

தாம்பரம் ரயில் நிலையம்: அப்போது வாக்குப்பதிவுக்கு சில நாட்களுக்கு முன்பு, வாக்காளர்களுக்கு விநியோகிக்க நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் பணம் எடுத்துச் செல்லப்படுவதாகத் தேர்தல் பறக்கும் படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து பறக்கும் படை அதிகாரிகள் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்தவர்களிடம் தாம்பரம் ரயில் நிலையத்தில் வைத்து சோதனை நடத்தினர்.
ரூ.4 கோடி: அப்போது சிலரிடம் இருந்து சுமார் 4 கோடி அளவுக்கு ரொக்கம் கைப்பற்றப்பட்டது. இந்தச் சம்பவம் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி நடந்தது. அவர்கள் பாஜக எம்எல்ஏவும் நெல்லை லோக்சபா தொகுதி பாஜக வேட்பாளருமான நயினார் நாகேந்திரனுக்காகப் பணத்தை எடுத்துச் சென்றதாகச் சொல்லப்பட்டது. இது குறித்த வழக்கை முதலில் தாம்பரம் போலீசார் பதிவு செய்திருந்த நிலையில், பிறகு இந்த வழக்கு இந்த விவகாரம் குறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி, பாஜக தமிழ்நாடு அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகத்திற்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பினர்.
இருப்பினும் எந்தவொரு காரணமும் சொல்லாமல் தனக்குச் சம்மன் அனுப்பி உள்ளதாகவும் இதனால் சம்மனை ரத்து செய்ய வேண்டும் என்றும் கேசவ விநாயகம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட பணத்துக்கும், தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அரசியல் உள்நோக்கத்துடன் நடத்தப்படும் புலன் விசாரணையே சட்டவிரோதமானது என்பதால் இந்த வழக்கின் விசாரணைக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டு இருந்தது.
வழக்கு: இந்த வழக்கு கடந்த மாதம் 24ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட மூவருக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லாத நிலையிலும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகக் கேசவ விநாயகம் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. அப்போது சிபிசிஐடி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கேசவ விநாயகத்திற்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என்றும் அப்படி இருக்கும் போது வழக்கை ரத்து செய்யக் கோரி அவர் மனுத்தாக்கல் செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இன்று விசாரணை: அப்போது குறுக்கிட்ட கேசவ விநாயகத்திற்குத் தரப்பு வழக்கு விசாரணைக்குத் தடை விதிக்குமாறு கோரிக்கை விடுத்தனர். இருப்பினும், அதை ஏற்க மறுத்த சென்னை ஐகோர்ட், இது தொடர்பாகப் பதிலளிக்க போலீசாருக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர். அதன்படி இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.












Click it and Unblock the Notifications