கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில் வழுக்கும் தரைகள்.. மாற்றுத்திறனாளிகள் புகார் லிஸ்ட்! ஹைகோர்ட் உத்தரவு!
சென்னை: சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் அமைக்கப்படுவதை உறுதி செய்ய கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் மிகப்பெரிய பேருந்து நிலையம் ஆகும். இது 1999 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் அப்போதைய முதல்வராக இருந்த கருணாநிதியின் உத்தரவின்பேரில் கட்டுமானம் தொடங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆட்சி மாற்றத்திற்கு பிறகு 2002 ஆம் ஆண்டு முதல்வராக பதவியேற்ற ஜெயலலிதா திறந்து வைத்தார்.

இந்த பேருந்து நிலையத்திற்கு புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் பேருந்து நிலையம் என பெயரிட்டிருந்தார். இந்த இடத்தில் 160 பிளாட்பார்ம்கள் உள்ளன. இதன் பட்ஜெட் 103 கோடி ரூபாய் ஆகும். இதன் பரப்பளவு மொத்தம் 36.5 ஏக்கர் ஆகும். இந்த பேருந்து நிலையத்தில் லாக்கர் ரூம்கள், ஹோட்டல்கள், சிறிய உணவு கடைகள், ஏடிஎம்கள், 10 டிராவல் ஏஜென்சி அலுவலகங்கள், தங்கும் இடங்கள் உள்ளன.
என்னதான் இத்தனை வசதிகள் இருந்தாலும் பண்டிகை காலங்களில் போக்குவரத்து நெரிசல் என்பது மிகப் பெரிய பிரச்சினையை ஏற்படுத்தி வந்தது. அதிலும் தென் தமிழகம் செல்லும் பயணிகள் கோயம்பேட்டில் ஏற்படும் போக்குவரத்தை ஊர்ந்து சென்று சொந்த ஊர்களுக்கு போவதற்குள் போகும் போகும் என்றாகிவிடுகிறது. இதனால் அதிமுக ஆட்சியில் கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையம் கட்டும் பணிகள் தொடங்கின.
இந்த பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழாவுக்காக காத்திருக்கிறது. சில மழைநீர் வடிகால் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் திறப்பு விழா தாமதமாகிறது. இந்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் என பெயரிடப்பட்டுள்ளது.
இது கோயம்பேடு பேருந்து நிலையத்தை விட பெரியது. அதாவது 88 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. இங்கு தென் தமிழகமான கன்னியாகுமரி, மதுரை, தூத்துக்குடி, திருச்சி, நெல்லை, திருவண்ணாமலை, செங்கோட்டை, தஞ்சை, விழுப்புரம் ஆகிய பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படும். இந்த பேருந்து நிலையத்தின் மதிப்பு ரூ 393 கோடியாகும்.
இந்த பேருந்து நிலையத்தை மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத்தினர் ஆய்வு செய்து அறிக்கையாக சிஎம்டிஏ அதிகாரிகளுக்கு தாக்கல் செய்திருந்தனர். அதில் பிரெய்லி எழுத்துகளும் அங்கு பொறிக்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளனர். பேருந்துகளின் வருகை மற்றும் புறப்பாடு பற்றிய விவரங்களை வழங்கும் ஆடியோ அல்லது விசுவல் காட்சி தேவைப்படுவதாகவும் அவர்கள் தெரிவிக்கிறார்கள்.
இந்த நிலையில் பேருந்து நிலையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான கோரிக்கைகள் நிறைவேறும் வரை கட்டி முடிக்கப்பட்டதற்கான சான்றை வழங்க தடை கோரி ஊனமுற்றோர் உரிமைகள் சங்கத்தின் உறுப்பினர் வைஷ்ணவி ஜெயக்குமார் மனு தாக்கல் செய்திருந்தார். மேலும் சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் அமைக்கப்படுவதை உறுதி செய்யவும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் எளிதில் வழுக்கும் தன்மை கொண்ட தரைகள் அமைக்கப்பட்டுள்ளன என்றும் மாற்றுத்திறனாளிகளுக்கென சாய்தளங்கள் அமைக்கப்படவில்லை என்றும் தெரிவித்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மனுதாரரின் குற்றச்சாட்டுக்கு பேருந்து நிலையம் தொடர்பான கூட்டு ஆய்வுக் குழுவின் அறிக்கை இன்னும் கிடைக்கப் பெறவில்லை என பதிலளித்தார். இதையடுத்து இந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications