கலக்கும் சென்னை ஐசிஎஃப்.. ஜம்மு காஷ்மிருக்கு போகும் வந்தே பாரத் ரயில் பெட்டிகள்! ஆனா ஏசி இருக்காது
சென்னை: நாடு முழுவதும் வந்தே பாரத் ரயில் பெட்டிகளை சென்னை ஐசிஎஃப் தொழிற்சாலை தயாரித்து கொடுத்து வருகிறது. இந்நிலையில், ஜம்மு காஷ்மீருக்கு என தனிச்சிறப்பு வாய்ந்த ரயில் பெட்டிகள் விரைவில் தயாரித்து கொடுக்கப்படும் என்று ஐசிஎஃப் அறிவித்திருக்கிறது.
உலகின் மிகப்பெரிய ரயில் சேவையில் இந்தியன் ரயில்வே முதன்மையானதாகும். ஏறத்தாழ 130 ஆண்டுகள் பழமையான இந்தியன் ரயில்வேயில் அவ்வப்போது சில மாற்றங்கள் செய்யப்பட்டு புதுப்பொலிவுடன் இருந்து வருகிறது. 12 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்களுடன் இயங்கும் இந்தியன் ரயில்வே ஆண்டுக்கு சுமார் 500 கோடி பயணிகளை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு சேர்க்கிறது. இந்நிலையில் ரயில் சேவையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்ல சமீபத்தில் வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

இந்த ரயில் முக்கிய நகரங்களை இணைக்கும். அதேபோல அதிவேகம் மற்றும் நவீன வசதிகளை கொண்டிருப்பதால் மக்கள் மத்தியில் இந்த ரயில் சேவைக்கு பெரும் வரவேற்பு இருந்தது. முதன் முதலாக டெல்லியிலிருந்து 759 கி.மீ தொலைவில் உள்ள உத்தரப் பிரதேசத்தின் வாரணாசிக்கு இயக்கப்பட்டது. மொத்தம் 16 பெட்டிகளை கொண்ட இந்த ரயிலில் இருக்கை வசதி மட்டுமே இருக்கும். எடை குறைவான இந்த ரயில் கவாச் ரயில் பாதுகாப்பு தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது.
மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த ரயில் இயக்கப்பட்டதால் அதேபோல மிகுந்த வரவேற்பையும் பெற்றிருக்கிறது. அதிகபட்சமாக 180 கி.மீ வேகத்தில் இயங்கும் இந்த ரயில் சில குறிப்பிட்ட நிறுத்தத்தில் மட்டுமே நின்று செல்லும். இந்நிலையில் பல்வேறு மாநிலங்களுக்கு இந்த ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்து வருகிறார். இந்த ரயில் பெட்டிகள் முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுகின்றன. இதில் சென்னை ஐசிஎஃப் முக்கிய பங்கு வகிக்கிறது.

இங்கிருந்து ஏராளமான வந்தே பாரத் ரயில் பெட்டிகள் தயாரித்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதேபோல ஜம்மு காஷ்மீருக்கும் தனிச்சிறப்பு வாய்ந்த வந்தே பாரத் ரயில் பெட்டிகள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று ஐசிஎஃப் தற்போது அறிவித்திருக்கிறது. இது குறித்து அதன் பொது மேலாளர் பிஜி மல்லையா, "ஜம்மு காஷ்மீர் கால நிலைக்கு ஏற்ப ஏசிக்கு பதில் ஹீட்டர் பொருத்தப்பட்ட வந்தே பாரத் ரயில் பெட்டிகள் விரைவில் தயாரித்து வெளியிடப்படும். அதேபோல எல்எச்பி பெட்டிகளுடன் கூடிய புஷ் புல் ரயிலையும் நாங்கள் தயாரித்து வருகிறோம்.
வேகம் அதிகரிக்க அதிகரிக்க பயணிகளின் இருக்கை வசதியையும் மேம்படுத்த வேண்டும். அப்படி மேம்படுத்தப்பட்ட இருக்கைகள் கொண்ட பெட்டிகள்தான் புஷ் புல் ரயில்கள். இந்த பெட்டிகள் இதற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ரயில் என்ஜினுடன் இணைக்கப்படும்" என்று கூறியுள்ளார். ஐசிஎஃப் கடந்த ஆண்டு வரை 12 வகையான ரயில் பெட்டிகளை தயாரித்திருந்த நிலையில், இந்த ஆண்டு 30 வகையான ரயில் பெட்டிகளை உற்பத்தி செய்து கொடுக்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications