சென்னையில் ஐபிஎல் போட்டிகளுக்கு தடை? அவசர முறையீட்டில் ஐகோர்ட் தலைமை நீதிபதி கேட்ட கேள்வி!
சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் காரணமாக சென்னையில் நடக்கும் ஐபிஎல் போட்டிகளை தள்ளி வைக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை அவசரமாக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. சட்டத்தில் எந்த தடையும் இல்லாத நிலையில் ஐபிஎல் போட்டிகளை எப்படி நிறுத்த முடியும்? என ஐகோர்ட் தலைமை நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னை உள்ளிட்ட நகரங்களில் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருந்தாலும் வழக்கம் போல ஐபிஎல் போட்டிகள் இந்த ஆண்டும் நடத்தப்பட உள்ளது. சென்னை பஞ்சாப் அணிகள் மோதும் முதல் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் மைதானத்தில் நாளை நடைபெற உள்ளது.

இந்த நிலையில், சென்னையில் ஐபிஎல் போட்டிகளை நடத்துவதை தள்ளிவைக்க கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த பிரபாகரன் என்பவர் மனு தாக்கல் செய்தார். அதாவது தேர்தல் பிரச்சாரங்கள் உச்சத்தை எட்டியிருக்கும் ஏப்ரல் 4 மற்றும் 11ஆம் தேதிகளில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற உள்ளது.
ஐபிஎல் போட்டிகளில் அரசியல் கட்சிகள் தங்களுடைய பிரச்சாரத்தை செய்ய ஆதரவாளர்களை மைதானத்தில் களம் இறக்க வாய்ப்பு உள்ளது. மைதானத்திற்குள் மோதல்களுக்கும் வழி வகுக்கும் வாய்ப்புள்ளது. எனவே இந்த தேதிகளில் சென்னையில் போட்டி நடத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கோரியுள்ளார்.
இந்த மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என இன்று காலை தலைமை நீதிபதி அமர்வில் முறையிடப்பட்டது. ஆனால், இந்த முறையீட்டை ஏற்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. சட்டத்தில் எந்த தடையும் இல்லாத நிலையில் ஐபிஎல் போட்டிகளை எப்படி நிறுத்த முடியும்? ஐபிஎல் போட்டிகளை நடத்துவதால் மனுதாரருக்கு என்ன பிரச்சனை? என ஐகோர்ட் தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.
மேலும், இந்த வழக்கை அவசரமாக விசாரிக்க முடியாது என்றும் வழக்கு எண்ணிடப்பட்டால் வழக்கமான நடைமுறைப்படி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.


Click it and Unblock the Notifications
