சாலையில் வழுக்கி விழுந்த சென்னை ஐடி பெண் ஊழியர்! தலை நசுங்கியதால் பூசணிக்காயை வைத்து இறுதிச் சடங்கு
சென்னை: சென்னை ஆலந்தூரில் சாலையில் தேங்கிய கழிவு நீரில் இரு சக்கர வாகனத்தில் வந்த பெண் ஐடி ஊழியர் வழுக்கி விழுந்த போது அவ்வழியாக வந்த லாரி டயரில் சிக்கி தலை சிதைந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் அரிசிப்பெரியாங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் நித்யா. இவரது தோழி ஹரிணி. இவர்கள் இருவரும் சென்னை சோழிங்கநல்லூரில் தங்கி அங்கிருக்கும் தனியார் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 7ஆம் தேதி நள்ளிரவு இருவரும் தலைகவசம் அணிந்து கொண்டு பல்லாவரத்தில் இருந்து இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது பரங்கிமலை வேளச்சேரி உள்பட்டச் சாலையில் (inner ring road) சென்று கொண்டிருந்தனர்.
அங்கு தில்லை கங்கா நகர் சுரங்கப்பாலத்தில் அடியில் பிளவுப்பட்ட சிமெண்ட் சாலையில் கழிவு நீர் தேங்கி இருந்தது. இதை அவர்கள் இருவரும் கவனிக்காமல் அந்த நீரில் வாகனத்தை செலுத்தினர். அப்போது வாகனம் வழுக்கி இருவரும் நிலைத்தடுமாறி கீழே விழுந்தனர்.
அப்போது அவ்வழியாக வந்த மினி லாரி நித்யாவின் தலை மீது ஏறியது. இதில் அந்த பெண்ணின் ஹெல்மெட் கழன்று ஓடியது. தலை சிதைந்து அந்த பெண் சம்பவ இடத்திலேயே பலியானார். வாகனத்தை ஓட்டி வந்த ஹரிணி, லேசான காயத்துடன் உயிர் பிழைத்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், உயிரிழந்த நித்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து ஏற்படுத்திய மினி லாரி ஓட்டுநரான, ராணிப்பேட்டையைச் சேர்ந்த மோகன்குமாரை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
பிரேத பரிசோதனை முடிந்து நித்யாவின் உடல் கடலூர், அரிசிபெரியாங்குப்பம் கொண்டு வரப்பட்டது. அங்கு அவரது உறவினர்கள் உடலை அடக்கம் செய்ய தயார் செய்தனர். தலை சிதைந்து அவர் உயிரிழந்த காரணத்தினால் அவரது தலைக்கு பதில் அந்த இடத்தில் வெள்ளை பூசணிக்காயை வைத்து அதன் மேல் அவரது புகைப்படத்தை வைத்து இறுதி சடங்கு செய்தது பார்ப்போரின் மனதை பதைபதைத்தது.












Click it and Unblock the Notifications