சென்னை கேளம்பாக்கம் வண்டலூர் சாலையில் தீ விபத்து.. சிக்கிய 700 பணியாளர்கள்.. மீட்பு பணி தீவிரம்
சென்னை: சென்னையை அடுத்த கேளம்பாக்கம் வண்டலூர் சாலையில் செயல்படும் தனியார் மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் உள்ளே சிக்கிக்கொண்டே 700க்கு மேற்பட்ட பணியாளர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த திடீர் தீ விபத்து காரணமாக புதுப்பாக்கம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தீயணைப்பு வீரரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
சென்னையை அடுத்த கேளம்பாக்கம் வண்டலூர் சாலையில் புதுப்பாக்கம் என்ற பகுதியில், சாஃப்ட்ஜெல் ஹெல்த்கேர் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தனியார் மருத்துவ தயாரிப்பு நிறுவனமான இங்கு 700க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். இதனிடையே அந்த நிறுவனத்தின் முதல் மாடியில் திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது. இதையடுத்து அந்த தீ வேகமாக பரவி, ஏசி, மின் வயர்கள் மீது பரவியது.

இந்த தீ மளமளவென பரவியதால் பதற்றம் ஏற்பட்டது. மின் கசிவினால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அங்கிருந்த பணியாளர்கள் உடனடியாக பாதுகாப்பான முறையில் வெளியேற தொடங்கினார்கள். இதுபற்றி தகவல் அறிந்த சிறுசேரி தீயணைப்பு துறை மற்றும் கேளம்பாக்கம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.. தீ விபத்தை அடுத்து அங்கு இருந்த 700 பேரையும் வெளியேற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தீயணைப்பு படையினர், போலீசார், நிறுவனத்தில் பணியாற்றுவோர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். தீயணைப்பு துறையினர் புகையை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். கண்ணாடியை உடைத்து தண்ணீர் அடித்து நெருப்பையும் , புகையையும் கட்டுப்படுத்தும் முயற்சியில் இறங்கி உள்ளனர். இதனிடையே ஆக்சிஜன் யூனிட்டும் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த தீ விபத்தால் 4 பெண்களுக்கு புகை மூட்டத்தால் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அவர்களை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இதனிடையே தீ விபத்தால் அந்த பகுதியாக புகை மூட்டமாக மாறியது. இந்த விபத்து குறித்து கேள்விப்பட்டு, அந்த நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களின் உறவினர்கள் அங்கு குவிந்ததால் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. இதுவரை பெரிய அளவில் எந்த அசம்பாவிதமும் நடைபெறவில்லை.. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications