கியர் போட்டாச்சு! ஒரு இடம் விடாம இன்று இரவு “டமால் டுமீல்” தான்.. வெதர்மேன் பரபர எச்சரிக்கை!
சென்னை: தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் இன்று இரவு 'டமால் டுமீல்' தான் என வார்னிங் கொடுத்துள்ளார் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்.
தமிழ்நாட்டுப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதிலும் குறிப்பாக, இன்று 4 மணியளவில் வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், தமிழ்நாட்டின் 34 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு, அதாவது 7 மணி வரை இடியுடன் கூடிய மழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதியில் மாலையில் மேகம் கறுத்து, லேசான இடியுடன் மழை பெய்யத் தொடங்கியுள்ளது.
இன்று இரவு பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்று இரவில் மழை கொட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு வெதர்மேன் என அழைக்கப்படும் பிரதீப் ஜானும், சென்னையில் இன்று டமால் டுமீல் தான் என வார்னிங் கொடுத்துள்ளார்.
தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "தமிழகம் முழுவதும் ஒரு நாள் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுருக்கமாகச் சொன்னால், தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அடுத்த ஒரு வாரம் தமிழ்நாடு முழுவதும் சென்னை முழுக்க பரவலாக இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.
கரூர், திருப்பூர், கோயம்புத்தூர், திருச்சி, திண்டுக்கல், நாமக்கல், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி போன்ற இடங்களில் எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யாமல் போய்விட்டது. இங்கெல்லாம் இப்போது மழை பெய்ய வாய்ப்புள்ளது. டெல்டாவிலும் சில மாவட்டங்களில் 100 மி.மீட்டர் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

கடந்த ஒரு மாதமாக இந்தியாவிலேயே அதிக வெப்பமான இடமாக பதிவான பாளையங்கோட்டையில் நேற்று 40.6 C வெப்பம் பதிவாகியுள்ளது. சில மாதங்களுக்குப் பிறகு பாளையங்கோட்டையில் முதல் மழை பெய்யக்கூடும்.
சென்னையில் இரவு நேரத்தில் மீண்டும் டமால் டூமீல் என இடியுடன் கூடிய மழை எதிர்பார்க்கப்படுகிறது. ஆகஸ்ட் மாத மழைப்பொழிவு சாதனை தொடர்கிறது. பருவமழைக் காலம் நீட்டிக்கப்படுவதன் காரணமாக இந்த தென்மேற்குப் பருவமழை சென்னையில் மிக அதிகமாக உள்ளது." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications