சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது
சென்னை: சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகாரின் பேரில் குதிரை ஓட்டி நித்தீஷ் என்பவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
சென்னை மெரினா உள்ளிட்ட கடற்கரைகளில் குதிரை சவாரி செய்யப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட தூரத்தில் ரூ 100, ரூ 200 என வசூல் செய்யப்படுகிறது. இந்த குதிரை சவாரியில் இருந்தபடியே கடற்கரையில் புகைப்படம் எடுப்பதையும் பலர் விரும்புகிறார்கள்.

பெரும்பாலும் இந்த குதிரை சவாரியில் சிறுவர், சிறுமியர் செல்வது வழக்கம். அந்த வகையில் இன்று சென்னை மெரினா கடற்கரையில் 6 வயது சிறுமி ஒருவரை அவரது பெற்றோர் குதிரை சவாரிக்கு அனுப்பினர்.
அப்போது நித்தீஷ் என்ற குதிரை ஓட்டி அந்த சிறுமியை அழைத்துச் சென்றது தெரிகிறது. சிறிது தூரம் சென்றதும் சிறுமிக்கு நித்தீஷ் பாலியல் தொல்லை கொடுத்ததாக சொல்லப்படுகிறது. இதையடுத்து சிறுமி கொடுத்த தகவலின்பேரில் அந்த நபரை பொதுமக்கள் பிடித்து கடுமையாக தாக்கி ஐஸ்ஹவுஸ் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
ஐஸ் அவுஸ் போலீஸார், 18 வயதான நித்தீஷ் மீது போக்சோ வழக்கு போட்டு சிறையில் அடைத்தனர். இதே போல் கடந்த 2018 ஆம் ஆண்டு மெரினா கடற்கரைக்கு தனது தோழியுடன் வந்த 13 வயது சிறுமி குதிரை சவாரி சென்ற போது அப்படியே யாரும் பார்க்காத நேரம் பார்த்து தனது குடியிருப்புக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இந்த சம்பவத்தில் குதிரை ஓட்டி ஒருவர் கைது செய்யப்பட்டார். அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது சென்னை சிறப்பு நீதிமன்றம். அது போல் கடந்த ஆண்டு மே மாதம் காணாமல் போன இரு 14 வயது சிறுமிகளை மெரினா கடற்கரையில் போலீஸார் மீட்டனர்.
அவர்கள் இருவரும் பல்வேறு பகுதிகளுக்கு அழைத்து செல்லப்பட்டு பாலியல் கொடுமை செய்ததாக 4 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இன்று தற்போது ஒரு பாலியல் சீண்டல் நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications