பளிச் லிப்ஸ்டிக்.. பறிபோன வேலை? தபேதார் மாதவியால் உண்டான சர்ச்சை! மேயர் அலுவலகம் கொடுத்த விளக்கம்!
சென்னை : சென்னை மாநாகராட்சி மேயர் பிரியாவின் தபேதாரான மாதவி பளிச்சிடும் வண்ணத்தில் லிப்ஸ்டிக் பூசியதால் பணியிட மாற்றம் செய்யப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், சர்ச்சை வெடித்தது. இந்நிலையில் சென்னை மேயரின் தபேதார் மாதவி லிப்ஸ்டிக் விவகாரத்தால் பணியிட மாற்றம் செய்யப்படவில்லை எனவும், பணியை சரிவர செய்யாத காரணத்தால் மெமோ கொடுக்கப்பட்டு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மேயர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது.
சென்னை மாநகராட்சியின் 49ஆவது மேயராக பிரியா பொறுப்பு வகித்து வருகிறார். கடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சியின் 74 வது வார்டு கவுன்சிலராக வென்ற அவர் 29 வயதில் சென்னை மாநகராட்சியில் மேயராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மிகவும் இளம் வயது மேயரான பிரியா, கொரோனா மற்றும் மழை வெள்ள பேரிடர்களில் நள்ளிரவிலும் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பணி செய்து பாராட்டினை பெற்றவர்.
இது ஒருபுறம் இருக்க மாநகராட்சி மேயர் பதவி என்பது தமிழகத்தின் உயரிய பதவிகளுள் ஒன்றாக பார்க்கப்படுகிறது. யாருக்கும் இல்லாத வகையில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாநகராட்சிகளின் மேயர்களுக்கு செங்கோலும் தங்கப்பதக்கமும் அணிவிக்கப்படுகிறது. இதே போல மாவட்ட ஆட்சியர்கள், நீதிபதிகளுக்கு இருப்பது போல செங்கோல் தாங்குபவரும், தபேதாரும் நியமிக்கப்படுகின்றனர்.
சென்னை மாநகராட்சி மேயராக பிரியா தேர்ந்தெடுக்கப்பட்ட போது முதல் பெண் தபேதாராக மாதவி என்பவர் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் திடீரென அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டது சர்ச்சையாகியுள்ளது. மேயருக்கு முன்னே செங்கோலை ஏந்தியும் கூட்ட நெரிசல் இல்லாமல் வழி ஏற்படுத்தி தருவதும் தபேதாரின் பணி. இந்த நிலையில் மாதவி உதட்டில் லிப்ஸ்டிக் பூசும் பழக்கம் இருந்ததால் அதனை பயன்படுத்தக் கூடாது என அறிவுரை வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆனாலும் மாதவி லிப்ஸ்டிக் பூசி வந்ததாக கூறப்படுகிறது. கடந்த மாதம் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது மாதவி லிப்ஸ்டிக் பூசியதாகவும் அதனை மேயர் ப்ரியாவின் உதவியாளர் சிவசங்கரன் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. இதை அடுத்து மாதவி இடமாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. சென்னை மாநகராட்சியில் பணியாற்றிய அவர் மணலி மண்டலத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்.
மேலும் உரிய நேரத்திற்கு பணிக்கு வராதது, சீனியர்களின் உத்தரவை மதிக்காதது உள்ளிட்ட காரணங்களால் மாதவிக்கு மெமோ அனுப்பப்பட்டதாகவும் அதற்கு அவர் உரிய பதில் அளிக்காததால் பணியிட மாற்றம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக பேசிய மாதவி,”தான் அலுவலகத்திற்கு நேரம் தவறி வந்ததற்கும், உயர் அதிகாரிகளின் உத்தரவை மீதிதாக கூறப்படுவதற்குமான ஆதாரங்களை காண்பிக்க முடியுமா? மெமோ அனுப்பப்பட்ட தேதியான ஆகஸ்ட் 6ஆம் தேதி அரை மணி நேரம் தாமதமாக அதாவது 10:30 மணி அளவில் அலுவலகத்திற்கு வந்தேன். காலில் சிறிய காயம் இருப்பதால் தான் தாமதம் ஏற்பட்டது.
எனது உதட்டு சாயத்தை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று மேயர் கூறிய உத்தரவை மீறியது தான் மெமோவில் குறிப்பிடப்பட்டிருப்பதாகவும், மற்ற மாநகராட்சியின் துறைகளுக்கு தான் செல்லக்கூடாது என மெமோவில் குறிப்பிட்டிருந்ததாகவும் மாநகராட்சியின் எந்த ஒரு அரசாணையிலும் ஒரு துறையில் பணிபுரியும் ஊழியர் மாற்றுத் துறைக்கு செல்லக்கூடாது என குறிப்பிடப்படவில்லை என்றும் மெமோவில் மேயர் அலுவலக அதிகாரிக்கு பதிலளித்துள்ளார்.
சென்னை மாநாகராட்சி மேயர் பிரியாவின் தபேதாரான மாதவி பளிச்சிடும் வண்ணத்தில் லிப்ஸ்டிக் பூசியதால் பணியிட மாற்றம் செய்யப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், சென்னை மேயர் அலுவலகம் மறுத்துள்ளது. கடந்த ஆகஸ்ட் ஆறாம் தேதி மேயர் அலுவலகத்தின் அலுவலர் சிவசங்கர் மூலமாக அலுவலகத்திற்கு நேரம் தவறி வந்ததாகவும், கடமை தவறியதாகவும், உயர் அதிகாரிகளின் உத்தரவை மீறியதாகவும் மெமோ அனுப்பப்பட்டு இருக்கிறது.
அதற்கு உரிய பதிலை மாதவி அளிக்கவில்லை. லிப்ஸ்டிக் போடாதே என கூறியதை மீறியதுதான் தன் மீது ஆன குற்றமா? என தபேதார் மாதவி மெமோ விற்கு விளக்கம் அளித்து இருந்தார். லிப்ஸ்டிக் விவகாரத்தில் மாதவி பணியிட மாற்றம் செய்யப்படவில்லை. பணியை சரிவர செய்யாத காரணத்தால் தான் மெமோ கொடுக்கப்பட்டு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மேயர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது.












Click it and Unblock the Notifications