சென்னை மெட்ரோவுக்கு வந்த சிக்கல்.. ஓராண்டு தாமதம் ஆகுமாம்.. நிதி சிக்கல் காரணமா? பின்னணி என்ன
சென்னை: சென்னையில் இப்போது பல்வேறு பகுதிகளில் மெட்ரோ கட்டுமானம் படுவேகமாக நடந்து வருகிறது. இருந்த போதிலும் சில தவிர்க்க முடியாத காரணங்களால் மெட்ரோ கட்டுமானம் நிறைவடைவது சுமார் ஓராண்டு வரை தாமதமாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான காரணம் குறித்து நாம் பார்க்கலாம்.
இந்தியாவில் அதிக போக்குவரத்து நெரிசல் மிக்க நகரங்களில் ஒன்றாகச் சென்னை இருக்கிறது. காலை மற்றும் மாலை நேரங்களில் பல பகுதிகளில் டிராபிக் நெரிசல் உச்சத்தில் தான் இருக்கிறது.

பொதுமக்கள் அதிகளவில் பொது போக்குவரத்தைப் பயன்படுத்தினால் மட்டுமே சாலைகளில் டிராஃபிக் நெரிசல் குறையும். எனவே, பொதுமக்களை பொது போக்குவரத்தைப் பயன்படுத்த வைக்கத் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதில் முக்கியமானது மெட்ரோ.
சென்னை மெட்ரோ: ஏசி பயணம், சரியான நேரத்திற்குச் செல்ல முடிவது எனப் பல காரணங்களால் மெட்ரோவை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் நகர் முழுமையையும் கவர் செய்யும் வகையில் தமிழ்நாடு அரசு மெட்ரோ திட்டத்தை அமைத்து வருகிறது. இது போக்குவரத்து நெரிசலை வெகுவாக குறைக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது சென்னையில் விம்கோ நகர் முதல் சென்னை ஏர்போர்ட் வரையிலும், சென்னை சென்ட்ரல் முதல் பரங்கி மலை வரை என 2 ரூட்களில் 54.1 கிமீ தூரத்திற்கு இயங்கி வருகிறது. இப்போது மொத்தம் 41 மெட்ரோ ரயில் நிலையங்கள் உள்ளன. 2007இல் இது குறித்த அறிவிப்பு வெளியான நிலையில், கடந்த 2015 முதல் படிப்படியாக மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. 2019இல் முதற்கட்ட மெட்ரோ பணிகள் முழுமையாக நிறைவடைந்தது.
2ம் கட்டம்: மெட்ரோவுக்கான வரவேற்பு அதிகமாக இருந்த நிலையில், 2ம் கட்ட மெட்ரோ குறித்த அறிவிப்பும் வெளியிடப்பட்டு அதற்கான கட்டுமானமும் தொடங்கப்பட்டது. 3 ரூட்களில் 116 கிமீ தொலைவுக்கு மெட்ரோ பணிகள் திட்டமிடப்பட்டுள்ளன. மாதவரம் காலனி- சிறுசேரி, பூந்தமல்லி- கலங்கரை விளக்கம், மாதவரம் காலனி- சோழிங்கநல்லூர் என 3 ரூட்களில் இப்போது கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.
தாமதம்: இந்த 2ம் கட்ட மெட்ரோவில் மொத்தம் 113 மெட்ரோ நிலையங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. இவை முழுமையாகப் பயன்பாட்டிற்கு வரும் போது விரிவான மெட்ரோ கட்டமைப்பைக் கொண்ட நகரமாகச் சென்னை மெட்ரோ மாறும். 2ம் கட்ட மெட்ரோ பணிகள் நகர் முழுவதும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வரும் 2025 இறுதி அல்லது 2026 தொடக்கம் முதல் 2ம் கட்ட மெட்ரோ படிப்படியாகச் செயல்பாட்டிற்கு வரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி 2027 டிசம்பரில் 2ம் கட்ட மெட்ரோ கட்டுமானம் முழுமையாக நிறைவடையும் எனக் கூறப்பட்டது. இதில் தான் இப்போது தாமதம் ஏற்பட்டுள்ளது.
அதாவது மெட்ரோ கட்டுமானம் என்பது மிகப் பெரிய பிராஜக்ட். இதை ஒரே நிறுவனம் மேற்கொள்ளாது. கட்டுமானத்தை விரைவுபடுத்த இது பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, பல நிறுவனங்களுக்கு டெண்டர் விடப்படும். சென்னை மெட்ரோ 2ம் கட்டமும் அதேபோல பல நிறுவனங்களுக்கு டெண்டர் விடப்பட்டது. இதில் பல பகுதிகளில் கட்டுமானம் திட்டமிட்டபடி நடந்து வந்தாலும் சில பகுதிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாம். இதன் காரணமாகத் திட்டம் முழுமையாக நிறைவடைவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
முதல்வர் ஸ்டாலின்: சமீபத்தில் மெட்ரோ கட்டுமானத்திற்கு நிதி விடுவிக்கக் கோரி பிரதமர் மோடியை சந்திக்கச் சென்றிருந்த முதல்வர் ஸ்டாலினும் இதை உறுதி செய்தார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின், "பல்வேறு நிலைகளில் கட்டுமானம் தாமதமாகி வருகின்றன. இதனால் கட்டுமானம் முழுமையாக நிறைவடைவது ஓராண்டு வரை தாமதம் ஆகும். டிசம்பர் 2027க்கு பதில் டிசம்பர் 2028ல் தான் கட்டுமானம் முடியும்" என்றார்.
இதன் மூலம் மெட்ரோ கட்டுமான ஓராண்டு தாமதம் ஆவது உறுதியாகியுள்ளது. இது கட்டுமான செலவையும் அதிகரிக்கும் என்றே வல்லுநர்கள் கூறுகிறார்கள். சென்னை மக்களும் ஓராண்டு கூடுதலாகக் கட்டுமானத்தால் ஏற்படும் சிரமத்தை எதிர்கொண்டு தீர வேண்டும்.












Click it and Unblock the Notifications