தொடரும் கனமழை.. சென்னை மெட்ரோ, புறநகர் ரயில்கள் குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு
சென்னை: தலைநகர் சென்னைக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டு கனமழை பெய்து வரும் நிலையில், மின்சார ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில்கள் குறித்து முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சென்னையில் நேற்று முன்தினம் மழை முதலே அதிதீவிர கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று அதிகாலை மிக குறுகிய நேரத்தில் அதிக மழை கொட்டித் தீர்த்தது.
சென்னைக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், நகரின் பல்வேறு இடங்களிலும் மழை நீர் தேங்கியுள்ளது.

சென்னை கனமழை
மழைநீர் தேங்கியதால் பல்வேறு இடங்களிலும் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டன. மோட்டர் மூலம் மழை நீரை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சில இடங்களில் சாலைகளில் மரங்கள் விழுந்ததால் அதை அகற்றும் பணிகளும் ஒரு புறம் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் சென்னைவாசிகளின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

ரயில் சேவை பாதிப்பு
நேற்றைய தினம் ரயில் தண்டவாளங்களில் தேங்கிய மழை நீரால் ரயில் சேவை கடுமையாகப் பாதிக்கப்பட்டன. எழும்பூர் - கடற்கரை வரையிலான பாதையில் மழைநீர் தேங்கியதால் எழும்பூர் ரயில் நிலையம் வரை மட்டுமே முதலில் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டன. பின்னர் சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே தண்டவாளமே தெரியாத அளவுக்குச் சூழ்ந்துள்ள மழை நீரில் மின்சார ரயில்கள் மிகவும் மெதுவான வேகத்தில் இயக்கப்பட்டன.

சென்னை புறநகர் ரயில் சேவை
இந்தச் சூழலில் சென்னை புறநகர் ரயில் இன்று வழக்கம் போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து ரயில் நிலையங்களும் சீரமைக்கப்பட்டுள்ளதால் ரயில்கள் வழக்கம் போல இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொருக்குப்பேட்டை ரயில் நிலையத்தில் மழை நீர் அதிக அளவு சூழ்ந்துள்ளதால், அங்கு மட்டும் குறைவான வேகத்தில் ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

மெட்ரோ ரயில்
கனமழை காரணமாகப் பொதுமக்கள் பயணத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில், சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. வழக்கமாக அரசு விடுமுறை நாட்களில் மெட்ரோ ரயில் காலை 7 - 10 மணி வரை மட்டுமே இயக்கப்படும். இருப்பினும், தற்போது கனமழை பெய்து வருவதால், பொதுமக்களுக்கு உதவும் வகையில் இன்று காலை 5.30 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video

உதவி எண்கள்
முதல்வர் ஸ்டாலின் நேற்றைய தினம் வெள்ள பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்தார். அடுத்து வரும் நாட்களிலும் கனமழை தொடர வாய்ப்புள்ளதால் தீபாவளிக்கு ஊருக்குச் சென்றவர்கள் சில நாட்கள் கழித்து சென்னை திரும்புமாறு கேட்டுக்கொண்டார். மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் 1913, 04425619206, 04425619207, 04425619208 ஆகிய எண்களைத் தொடர்பு கொண்டு உதவிகளைப் பெறலாம் எனச் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

சென்னை மழை
வரும் வாரத்தில் இரண்டு புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதிகளும், அடுத்த வாரம் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதியும் உருவாக வாய்ப்புள்ளதால் அடுத்து வரும் நாட்களிலும் சென்னையில் கனமழை பெய்யும் வாய்ப்புகள் அதிகம். இதனால் டார்ச், மெழுகுவர்த்தி போன்றவற்றை மின்சாரம் தடைப்பட வாய்ப்புள்ள பகுதிகளில் வசிப்போர் தயாராக வைத்துக்கொள்ள வேண்டும். முக்கியமான சான்றிதழ்களை, ஆவணங்களை பிளாஸ்டிக் பையில் போட்டு பரண் போன்ற உயரமான இடங்களில் தனியாக வைப்பது மூலம் அவை தண்ணீரில் நனைவதில் இருந்து பாதுகாக்கலாம்.












Click it and Unblock the Notifications