இனி தடுக்கவே முடியாது.. சென்னை மெட்ரோவுக்கு மெகா பூஸ்ட்.. ரூ.2,000 கோடி கடன் தர ஆசிய வங்கி ஒப்புதல்
சென்னை: மெட்ரோ 2ம் கட்ட கட்டுமானம் இப்போது சென்னையில் படுவேகமாக நடந்து வருகிறது. இதற்கிடையே மெட்ரோ கட்டுமானத்தை மேலும் துரிதப்படுத்தும் வகையில் இத்திட்டத்திற்கு ரூ.2000 கோடி, அதாவது 240 மில்லியன் டாலரை விடுவிக்க ஆசிய வளர்ச்சி வங்கி ஒப்புதல் கொடுத்துள்ளது. இதன் மூலம் கட்டுமானம் வேகமெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் இப்போது இரு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயங்கி வருகிறது. சென்னை சென்ட்ரல் முதல் பரங்கிமலை மற்றும் விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரை மெட்ரோ இயக்கப்படும் நிலையில், இதற்கு மிகப் பெரியளவில் வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனால் ஒவ்வொரு மாதமும் மெட்ரோவில் பயணிப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

மெட்ரோ 2ம் கட்டம்
இதையடுத்து சென்னை மெட்ரோ 2ம் கட்ட கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டது. மாதவரம் முதல் சிறுசேரி, கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி, மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் என மொத்தம் 3 ரூட்களில் மெட்ரோ 2ம் கட்டம் திட்டமிடப்பட்டது. மொத்தம் 118 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரூ.63 ஆயிரத்து 246 கோடி செலவில் மெட்ரோ கட்ட முடிவு செய்யப்பட்டது.
இதற்கான பணிகள் கடந்த 2017ல் தொடங்கப்பட்டது. முதலில் இத்திட்டம் முழுக்க முழுக்க மாநில அரசுத் திட்டமாக இருந்தது. இதன் காரணமாக மத்திய அரசின் நிதி கிடைக்கவில்லை. இதனால் நிதி ஒதுக்குவதில் தமிழக அரசுக்குச் சிரமம் இருந்தது. இந்தச் சூழலில் தான் கடந்த 2021ல் திமுக ஆட்சி அமைந்த பிறகு இந்த மெட்ரோ திட்டத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும் எனத் தமிழ்நாடு அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
கோரிக்கை
தமிழ்நாடு அமைச்சர்கள் இது தொடர்பாகத் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர். மேலும், தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினும் இது தொடர்பாக மத்திய அரசுக்குக் கடிதத்தையும் எழுதியிருந்தார். தொடர்ந்து கடந்தாண்டு செப்டம்பர் மாதம் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து இது குறித்து கோரிக்கை விடுத்திருந்தார். அதைத் தொடர்ந்து இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்க மத்திய அரசும் ஒப்புதல் கொடுத்தது.
நிதியுதவி
அதைத் தொடர்ந்து முழுத் தொகையையும் மத்திய அரசே கொடுக்கும் என்பது போலக் கூட இணையத்தில் தகவல் பரவியது. இருப்பினும், இது உண்மை இல்லை எனத் தமிழக அரசு பேக்ட் செக் பிரிவு விளக்கம் கொடுத்தது. அதாவது சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்டத்திற்கு மத்திய அரசுத் தரப்பில் ரூ.7 ஆயிரத்து 425 கோடியும், தமிழ்நாடு அரசுத் தரப்பில் ரூ.22 ஆயிரத்து 228 கோடியும் ஒதுக்கப்படுகிறது. பன்னாட்டு நிதி நிறுவனங்கள் மூலம் மாநில அரசின் உத்தரவாதத்தில் கடனாக ரூ.33 ஆயிரத்து 593 கோடியும் பெறப்படும் எனக் கூறப்பட்டு இருந்தது.
நிதி வழங்க ஒப்புதல்
ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (JICA), ஆசிய வளர்ச்சி வங்கி (ADB), ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) மற்றும் புதிய வளர்ச்சி வங்கி (NDB) ஆகியவை இத்திட்டத்திற்குக் கடன் ஒதுக்குகிறது. குறிப்பாக ஆசிய வளர்ச்சி வங்கி இத்திட்டத்திற்காக 780 மில்லியன் டாலர் வழங்கும் எனக் கடந்த 2022ல் ஒப்பந்தம் போடப்பட்டது. இந்தச் சூழலில் தான் இப்போது ரூ.2000 கோடி, அதாவது 240 மில்லியன் டாலரை விடுவிக்க ஆசிய வளர்ச்சி வங்கி ஒப்புதல் கொடுத்துள்ளது. இதுவரை இத்திட்டத்திற்கு 590 மில்லியன் டாலர் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
