கிளாம்பாக்கம் வரை மெட்ரோ.. மத்திய அரசு சொல்லப் போகும் குட் நியூஸ்.. வெளிவந்த சிறப்பான அப்டேட்!
சென்னை: சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரையிலான மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு விரைவில் அனுமதி வழங்கும் என்று எதிர்பார்ப்பதாக சென்னை மெட்ரோ ரயில் மேலாண் இயக்குநர் சித்திக் தெரிவித்துள்ளார். அதேபோல் இனி ஊபர் செயலியிலும் மெட்ரோ ரயில் டிக்கெட்டை பெற முடியும் என்று தெரிவித்துள்ளார்.
சென்னையில் தற்போது 2 வழித்தடங்களில் 54 கிமீ தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கிளாம்பாக்கத்தில் புறநகர் பேருந்து நிலையம் தொடங்கப்பட்டதால், மெட்ரோ ரயில் நிலையத் திட்டத்தை கிளாம்பாக்கம் வரை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் திட்டத்தை நீட்டிக்க முடிவு எடுக்கப்பட்டது.

சுமார் 15.5 கிமீ தொலைவுக்கு மெட்ரோ ரயில் திட்டம் நீட்டிக்கப்பட இருந்தது. இதன்பின் நெடுஞ்சாலைத் துறை மேம்பாலமும் அமைய இருந்ததால், பாலம் வடிவமைப்பு மற்றும் நிலம் ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டது. பின்னர் நடந்த பேச்சுவார்த்தையில் சிறு திருத்தங்களுடன் விமான நிலையம் - கிளாம்பாக்கம் வரையிலான மெட்ரோ ரயில் நீட்டிப்பு தொடர்பாக புதிய திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டது.
இந்த அறிக்கை தமிழக அரசிடம் கடந்த பிப்ரவரியில் சமர்ப்பிக்கப்பட்டது. இதன்பின் திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் அளித்ததோடு, நிலம் கையகப்படுத்தவும் தமிழக அரசு அனுமதி அளித்தது. இதன்பின் விரிவான திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் கோரி மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்திற்கு தமிழக அரசு அனுப்பி வைத்தது.
ஆனால் நீட்டிப்பு பகுதியின் தற்போதைய சந்தை மதிப்பை மறு ஆய்வு செய்து விரிவான திட்ட அறிக்கையுடன் மீண்டும் சமர்ப்பிக்க மத்திய அரசு அறிவுறுத்தியது. இதன்பின் மறு ஆய்வு செய்யப்பட்டு மீண்டும் விரிவான திட்ட அறிக்கை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை மெட்ரோ ரயில் மேலாண் இயக்குநர் சித்திக் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது சித்திக் பேசுகையில், சென்னை மெட்ரோ ரயில் பயண டிக்கெட்டை இனி வாட்ஸ் அப், பே டிஎம், நம்ம யாத்திரி செயலிகள் வழியே பெறுவதைப் போல் இனி ஊபர் செயலியிலும் பெறலாம். அதேபோல் விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரையிலான வழித்தட திட்ட அறிக்கை, மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளது. ஒப்புதல் கிடைத்ததும் அடுத்தகட்ட பணிகள் தொடங்கும்.
அதேபோல் கொச்சியில் இருக்கும் வாட்டர் மெட்ரோ திட்டம், சென்னையிலும் சாத்தியம்தான். அதற்கான ஆய்வுப் பணிகளும் நடந்து வருகின்றன. பூந்தமல்லி - போரூர் வழித்தடம் டிசம்பரில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும். அடுத்த 6 மாதங்களுக்கு ஒருமுறை அடுத்தடுத்த வழித்தடங்கள் பயன்பாட்டுக்கு வரும். MRTS வழித்தடம் இரண்டரை ஆண்டுகளில் மாற்றப்பட்டு அங்கு மெட்ரோ ரயில்கள் இயங்கும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications