முதல் பாலே சிக்ஸ் அடிக்கும் சென்னை மெட்ரோ.. மின்சார ரயிலை கட்டுப்பாட்டில் எடுத்த உடனே! அதிரடி முடிவு
சென்னை: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL), தற்போதுள்ள பறக்கும் ரயில் (MRTS) சேவைகளை மேம்படுத்தும் பணிகளை தொடங்கியுள்ளது. சென்னை கடற்கரை முதல் வேளச்சேரி வரை குளிர்சாதன வசதி கொண்ட ரயில்களை இயக்க சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதற்காக, குளிர்சாதன வசதி கொண்ட ரயில் பெட்டிகளை வாங்குவதற்கும், ரயில் நிலையங்களை மேம்படுத்துவதற்கும் விரைவில் டெண்டர்கள் வெளியிடப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த டெண்டர்கள் அடுத்த சில மாதங்களுக்குள் வெளியிடப்பட்டாலும், ரயில்கள் தயாரிக்கப்பட்டு சென்னைக்கு வந்து சேர 18 முதல் 24 மாதங்கள் ஆகும் என்று கூறப்படுகிறது.

சென்னை மெட்ரோ - மின்சார ரயில் இணைப்பு
புதிய ரயில்கள் ஏழு நிமிடங்களுக்கு ஒருமுறை இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சிக்னல் அமைப்பு மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்தில் பயன்படுத்தப்படும் அதே தகவல் தொடர்பு அடிப்படையிலான ரயில் கட்டுப்பாட்டு அமைப்புக்கு மாற்றப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
மாநில அரசு, குளிர்சாதன பெட்டிகளை அறிமுகப்படுத்துவது, சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது, மற்றும் ரயில் நிலையங்களை சீரமைப்பது ஆகியவை MRTS அமைப்பிற்கு ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை கொண்டு வரும் என்று கருதுகிறது. இது பயணிகளின் வசதியை மேம்படுத்தும் என்று ஓர் ஆதாரம் கூறியுள்ளது. மேலும், "முழு சுற்றுச்சூழலும் மாறும். இதன் மூலம் கிடைக்கும் வருவாய் மூலம் நிதி திரட்ட முடியும். இதற்கு இரண்டு வருடங்கள் ஆகும்" என்று அந்த ஆதாரம் மேலும் தெரிவித்தது. பயணக் கட்டணங்கள் திருத்தப்படுமா என்று கேட்டபோது, இது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மெட்ரோ நிர்வாகம் MRTS சேவைகளை இயக்கும்
அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு, ரயில்வே நிர்வாகம் தொடர்ந்து MRTS சேவைகளை இயக்கும். சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் முழு கட்டுப்பாட்டை எடுத்துக்கொள்ளும்போது பயணக் கட்டணங்கள் இறுதி செய்யப்படும் என்று கூறப்படுகிறது. தமிழ்நாடு அரசுக்கும் ரயில்வே துறைக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) தயாராகி வருகிறது.
இந்த ஒப்பந்தத்தின் முதல் வரைவு முடிக்கப்பட்டு, ரயில்வேயுடனான முதல் சுற்று பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விரைவில் ஒருமித்த கருத்து எட்டப்பட்டால், செப்டம்பர் மாத இறுதிக்குள் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் MRTS ஐ கையகப்படுத்துவதில் பல பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். எனினும், கட்டணங்கள் நியாயமானதாக இருக்க வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
மின்சார ரயிலை கைப்பற்றும் மெட்ரோ
தற்போதுள்ள தண்டவாளங்கள், பாலங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்புகள், தேய்மான மதிப்புடன் தமிழக அரசுக்கு மாற்றப்படும். தமிழக அரசால் நிதி அளிக்கப்பட்டு வாங்கப்பட்ட மின்சார ரயில் பெட்டிகள் (EMU) உள்ளபடியே தமிழக அரசுக்கு மாற்றப்படும். தெற்கு ரயில்வேக்குச் சொந்தமான EMU ரயில் பெட்டிகளை, தமிழக அரசு இரண்டு ஆண்டுகளுக்கு இலவசமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த காலக்கெடுவுக்குப் பிறகு, அந்தப் பெட்டிகள் தெற்கு ரயில்வேக்குத் திரும்ப ஒப்படைக்கப்படும் அல்லது தமிழக அரசு அவற்றின் தேய்மான மதிப்பைக் கொடுத்துப் பெற்றுக்கொள்ளலாம்.
மெட்ரோ கட்டுப்பாட்டில் சென்னை மின்சார ரயில்
இந்தக் கையகப்படுத்தும் நடவடிக்கைக்குத் தேவைப்படும் இரு வருட இடைக்காலப் பயிற்சி காலகட்டத்தில், தெற்கு ரயில்வே தனது ஊழியர்களை இலவசமாகப் பணியமர்த்தி CMRL ஊழியர்களுக்குப் பயிற்சி அளிக்கும். இந்த நேரத்தில், CMRL தனது சொந்த ஊழியர்களைப் புதிதாக நியமித்து பயிற்சி அளிக்க வேண்டும்.
இரண்டு ஆண்டுகளுக்குள் கையகப்படுத்தும் செயல்முறை நிறைவடையவில்லை என்றால், தெற்கு ரயில்வே தனது செயல்பாடுகளுக்கு தமிழக அரசிடம் கட்டணம் வசூலிக்க உரிமை உண்டு. சென்னை கடற்கரை மற்றும் கோட்டை ரயில் நிலையங்கள் போன்ற பொதுப் பயன்பாட்டு உள்கட்டமைப்புகளின் பயன்பாடு மற்றும் அதற்கான கட்டணங்கள் குறித்து தெற்கு ரயில்வே மற்றும் தமிழக அரசு இணைந்து ஒரு குழு அமைத்து முடிவு செய்யும்.


Click it and Unblock the Notifications
