சென்னையில் அம்மா மகள் செய்கிற காரியமா இது.. 10 கோடி.. மலேசியா நிறுவனத்திற்கு மறக்க முடியாத சம்பவம்
சென்னை: மலேசியாவை சேர்ந்த பிரபல வணிக நிறுவனத்திற்கு , சென்னை வளரசவாக்கத்தைச் சேர்ந்த கோவிந்தம்மாள் மற்றும் அவரது மகள் தமிழரசி ஆகியோர், சர்க்கரை ஏற்றுமதி செய்வதாக ரூ.10.60 கோடி பணம் வாங்கி உள்ளார்கள். ஆனால் சொன்னபடி மலேசிய நாட்டைச் சேர்ந்த நிறுவனத்துக்கு 12 ஆயிரம் டன் சர்க்கரை ஏற்றுமதி செய்யாத, அம்மா, மகள் ஆகியோர், ஏற்றுமதி செய்ததாக போலியான பில் அனுப்பி நிறுவனத்தை ஏமாற்றியுள்ளார்கள்.. அடுத்து என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
சென்னை வளசரவாக்கம் பிரகாசம் சாலை சரஸ்வதி ராமகிருஷ்ணா தெருவை சேர்ந்த தமிழரசி (வயது 42) என்பவர் ஏற்றுமதி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இவர்களிடம் மலேசியாவை சேர்ந்த பிரபல வணிக நிறுவனம் 12 ஆயிரம் டன் சர்க்கரையை வாங்குவதற்கு முடிவு செய்திருந்தது. அதன்படி அந்த நிறுவனத்தை சேர்ந்த அதிகாரி, தமிழரசியிடம் தொலைபேசி மூலம் பேசி, விலைப்பட்டியல் கேட்டிருக்கிறார் அதற்கு தமிழரசி சொன்ன விலையை அந்த நிறுவனம் ஒப்புக் கொண்டிருக்கிறது.

பின்னர், இதற்கான தொகையாக ரூ.10.60 கோடியை மலேசிய நிறுவனம் தமிழரசி நடத்தி வரும் நிறுவனத்தின் வங்கி கணக்குக்கு அனுப்பியிருக்கிறது. ஆனால் தமிழரசி, சர்க்கரையை ஏற்றுமதி செய்யாமலேயே, ஏற்றுமதி செய்தது போன்று போலி பில்லை மலேசிய நிறுவனத்துக்கு அனுப்பி ஏமாற்றினாராம். இதுதொடர்பாக மலேசியாவில் உள்ள நிறுவனத்தின் அதிகாரி சென்னை போலீஸ் கமிஷனர் அருணுக்கு 'ஆன்லைன்' மூலம் புகார் மனு அனுப்பினார்.
அந்த புகார் மனுவில் சர்க்கரை அனுப்புவதாக பல கோடி மோசடி செய்தது குறித்து விவரித்து இருந்தார். மேலும் இந்த மோசடி சம்பவத்தை பற்றி விவரித்து கூறி உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். தங்கள் நிறுவனம் செலுத்திய ரூ.10.60 கோடியை மீட்டு தர வேண்டும் என்று மலேசியா அதிகாரி வலியுறுத்தி இருந்தார்.
இந்த புகார் குறித்து உடனடி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு சென்னை போலீஸ் கமிஷனர் அருண் அதிரடியாக உத்தரவிட்டார். அதன்பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.. விசாரணையில் தமிழரசி, மதுரவாயல் கடும்பாடியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த தனது தாயார் கோவிந்தம்மாளுடன் இணைந்து இந்த மோசடியை அரங்கேற்றியது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் தமிழரசி, இதே பாணியில் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரிடம் சர்க்கரை ஏற்றுமதி செய்வதாக கூறி ரூ.75 லட்சம் மோசடியில் ஈடுபட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தாய் கோவிந்தம்மாள்-மகள் தமிழரசி ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரின் வீடுகளிலும் போலீசார் சோதனை நடத்தினார்கள். இதில் ரூ.1 கோடி மதிப்பிலான அசையா சொத்து ஆவணங்கள் மட்டுமே இதுவரை கைப்பற்றப்பட்டுள்ளது. விசாரணைக்கு பின்னர், தாய் கோவிந்தம்மாள், மகள் தமிழரசி ஆகிய 2 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications