கார்ப்பரேட் பள்ளிகளாகும் கார்பரேஷன் பள்ளிகள்! வியந்துபேசிய விஜய் சேதுபதி
சென்னை: இந்த 2 ஆண்டுகள் திமுக ஆட்சியில் அதிரடியான மாற்றங்களைப் பெற்றுள்ளன சென்னை அரசுப் பள்ளிகள். கடந்தகால ஆட்சியில் அழுக்குப் படிந்து கறைபிடித்துக்கிடந்த வகுப்பறைகள் எல்லாம் இன்றைக்கு ஸ்மார்ட் க்ளாஸ் ரூம்ஸ் ஆகத் தரம் உயர்ந்துள்ளன.
உண்மையில், நாம் ஒரு அரசுப் பள்ளிக் கூடத்திற்கு உள்ளேதான் நிற்கிறோமா என வியப்பை ஏற்படுத்தி உள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

சென்னை கார்பரேஷன் பள்ளிகள் அனைத்து 'CITIIS' திட்டத்தின் மூலம் இன்றைக்கு கார்பரேட் பள்ளிகளைப் போன்று மாற்றப்பட்டுவருகின்றன. தனியார் பள்ளியின் தரத்திற்குக் கொஞ்சமும் குறைந்ததல்ல என்று போட்டிப் போட்டு வளர்ந்து வருகின்றன.
அப்படி ஓர் அதிநவீன மாற்றத்தை அடைந்துள்ளது நெசப்பாக்கம் சென்னை அரசு மேல்நிலைப்பள்ளி.

புதிய கட்டடம், நவீன கம்ப்யூட்டர் லேப் எனப் பல மாற்றங்கள். அங்கு இத்தனைக் காலமாக இருந்த பழைய சுவர்கூட புதிய தோற்றத்தைப் பெற்றுள்ளது. அந்த மாற்றங்கள் குறித்து அப்பள்ளியின் தலைமையாசிரியை என்ன சொல்கிறார்? எப்படி உள்ளது அந்தப் பள்ளி?
"இதற்கு முன்புவரை ஆறாம் வகுப்பு முதல் 12 வகுப்பு வரை எங்கள் பள்ளியில் ஒரே ஒரு அறிவியல் கூடம் மட்டும்தான் இருந்தது. இந்த 'CITIIS' புராஜெட் மூலம் (City Investments to Innovate, Integrate and Sustain project) இப்போது எங்கள் பள்ளியில் 6 முதல் 10 ஆம் வகுப்பு வரைக்குமான பிள்ளைகளுக்கு என்று தனியாகப் புதுப்பிக்கப்பட்ட ஓர் அறிவியல் கூடத்தை உருவாக்கிக் கொடுத்துள்ளனர்.

மேற்கொண்டு 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு என்று தனியாக ஒரு புதிய கட்டடத்தைக் கட்டி, அதில் வேதியியல், உயிரியல் ஆகிய பாடங்களுக்கு என்று தனித்தனியாக அறிவியல் கூடங்களையும் ஒரு கம்ப்யூட்டர் லேப்பையும் கட்டித் தந்துள்ளனர்.
இவை போக மேலும் புதிய வகுப்பறைகளையும், புதியதாக நூலகம் ஒன்றையும் கட்டித்தந்துள்ளனர். முன்பு எங்கள் பள்ளியில் உள்ள பிள்ளைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ற அளவுக்குக் கழிப்பறை வசதிகள் இல்லாமல் இருந்தது.
அந்தப் பற்றாக்குறையைப் போக்கும்விதத்தில் கூடுதலாகக் கழிப்பறைகளையும் அமைத்துக் கொடுத்துள்ளனர். காலத்திற்கு ஏற்ற நவீன கழிப்பறைகளாகவும், மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்றவகையிலும் அவற்றைக் கட்டிக் கொடுத்துள்ளனர்.

பழைய பள்ளிக்கூடமானது சுவர்களுக்கு வண்ணம் அடிக்கப்படாமல் பல ஆண்டுகளாகப் பூஞ்சை படிந்துபோய் இருந்தது. இப்போது பள்ளி வகுப்பறை மற்றும் பள்ளிச் சுவர்கள் எங்கும் மிக நேர்த்தியான வண்ணம் அடித்து அதில் குழந்தைகளைக் கவரும்படி மிக அழகான ஓவியங்களைத் தீட்டிக் கொடுத்துள்ளனர். அதைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல் உள்ளது. வகுப்பறைக்குள் இருக்கும்போது மனதிற்கு அந்த ஓவியங்கள் ஒரு மகிழ்ச்சியைக் கொடுக்கின்றன.
ஒவ்வொரு ஓவியத்திற்கும் ஒரு 'தீம்' உள்ளது. அதைக் கொண்டு படங்கள் வரையப்பட்டுள்ளன. மேலும் அறிஞர்கள் சொன்ன கருத்துகள், பொன்மொழிகள் என்று பல ஆக்கப்பூர்வமான வேலைகள் செய்துதரப்பட்டுள்ளன. மாணவர்கள் தங்களின் பாடங்களைப் புரிந்துகொள்ளும் விதமாக, விளக்கப்படங்களையும் விவரமாக வரைந்துகொடுத்துள்ளனர்.

தினம் மாணவர்கள் நடந்து செல்லும் படிக்கட்டுகள்கூட பயனளிக்கும் அறிவுக் களஞ்சியமாக இன்றைக்கு மாற்றித்தரப்பட்டுள்ளது.
இந்த மாற்றங்கள் எல்லாம் பள்ளி கட்டடத்துக்குள் ஏற்பட்டுள்ளவை. இதைவிட மிக முக்கியமான மாற்றத்தையும் செய்து கொண்டுள்ளார்கள்.
குறிப்பாக, மாணவர்கள் இறைவணக்கம் பாடும்போது வெட்டவெளியில் வெயிலில்தான் இத்தனைக் காலமும் நின்று கொண்டிருந்தார்கள். இதனால், காலை வெயிலில் பல மாணவர்கள் சோர்ந்து போய்விடுவார்கள்.

அதைப் போன்று மழைக்காலங்களில் திடலில் நிற்க முடியாது. சேறும் சகதியுமாக இருக்கும். இப்போது நவீன வசதியுடன் கூரை வேய்ந்து கொடுத்துள்ளார்கள்.
அந்த அரங்கம் மிகச் சிறப்பாக இருக்கிறது. பிள்ளைகள் இனி, மழை வெயில் வேதனைகளைக் கடந்து வசதியாக இறைவணக்கம் பாடுவார்கள். அதேபோல் பள்ளி நிகழ்ச்சிகளையும் அதே அரங்கில் நாங்கள் நடத்த முடியும்.
இந்த மாற்றங்கள் எல்லாம் எங்கள் பள்ளிக்கு வருமா என நாங்கள் கனவு கண்டு கொண்டிருந்தோம். அத்தனை வசதிகளும் இன்றைக்கு ஒரே சமயத்தில் கிடைத்திருக்கிறது.

இன்றைக்கு எங்கள் பள்ளியில் எல்லா வசதிகளும் புதிய தோற்றத்தைப் பெற்றுள்ளன. வகுப்பறை புதுசு, வகுப்பறைக்குள் மாணவர்கள் பயன்படுத்தும் இருக்கை, பெஞ்ச் எல்லாம் புதியவை, சுவர் வண்ணம் புதுசு, சுவரில் உள்ள ஓவியங்கள் புதியவை. மின்விசிறிகள், மின் விளக்குகளும்கூட புதியவைதான். அந்தளவுக்குப் புத்தம் புதிய பொலிவைப் பெற்றுள்ளது எங்கள் பள்ளி.
இந்த அத்தனை மாற்றத்திற்கும் முதலமைச்சர் ஸ்டாலின்தான் காரணம். அவரது ஆட்சியில்தான் இப்படியான மாற்றத்தை நம் அரசுப் பள்ளிகள் கண்டுள்ளன.

அதற்காக எங்கள் பள்ளியின் பிள்ளைகள் மற்றும் பெற்றோர்கள், ஆசிரியர்கள் சார்பாக எங்களது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த மாற்றத்தின் மூலம் நகராட்சிப் பள்ளி ஆசிரியர்களையும் தலைநிமிர வைத்துள்ளார் முதல்வர். அவரை எவ்வளவு பாராட்டினாலும் அது தகும்" என்கிறார் இப்பள்ளியின் தலைமையாசிரியை.
இந்தப் பள்ளியில் பிள்ளைகள் குடிநீர் அருந்துவதற்காக ஆர்.ஓ பிளான்ட் போடப்பட்டுள்ளது. இந்தப் பள்ளியின் தோற்றத்தைப் பார்க்கும்போது அரசுப் பள்ளியைப்போன்றே தெரியவில்லை. ஏதோ தனியார் நடத்தும் கார்பரேட் பள்ளிக்கு இணையாகவே தெரிகிறது.

இந்த 2 ஆண்டுகள் ஆட்சியில் சென்னையில் உள்ள அரசுப் பள்ளிகள் பெற்ற நன்மைகள் கொஞ்ச நஞ்சமில்லை. இன்றைக்கு அரசுப் பள்ளிகள் அனைத்தும் வெறும் கல்வியைப் போதிக்கும் கூடங்களாக இல்லாமல், வாழ்க்கைக்குத் தேவையான அனுபவங்களையும் சேர்த்துச் சொல்லித் தரும்படி மாற்றப்பட்டுள்ளது.
நகராட்சிப் பள்ளிகளின் விளையாட்டு மைதானங்கள், இன்றைக்கும் சர்வதேச ஸ்டேடியம் போல தரம் உயர்த்தப்பட்டுள்ளன. கணித வகுப்புக்கு என்று தனி லேப், அறிவியல் வகுப்புக்கு என்று தனி லேப் எனப் பகுக்கப்பட்டுள்ளன.

மேலும் பிள்ளைகள் தொழில் அனுபவம் பெறுவதற்காகத் தையல் வகுப்பு, கைத்தொழில் பயிற்சி எனப் பலவற்றையும் சேர்த்தே சொல்லிக் கொடுக்கத் தொடங்கியுள்ளனர் ஆசிரியர்கள். அந்தளவுக்குத் தரம் உயர்த்தப்பட்டுள்ளது நமது பள்ளிகள்.
இந்த மாற்றங்கள் பற்றி நடிகர் விஜய் சேதுபதியின் குரல் பதிவில் பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள வீடியோ பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது. அதில் காட்சிப் படுத்தப்பட்டுள்ள பள்ளிக்கூடங்களின் ஒளிப்பதிவுகள் இன்றைக்குப் பேசுபொருளாக மாறி இருக்கின்றன.
சமீபத்தில் 12.99 கோடி செலவில் தண்டையார்பேட்டை, ராயபுரம், அண்ணா நகர், அடையார் ஆகிய பள்ளிகளைப் புதுப்பித்து முதலமைச்சர் ஸ்டாலின் திறந்துவைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications