ஓஎம்ஆர் ரோட்டில் புதுமை.. சென்னைவாசிகளுக்கு கிடைக்கும் அடுத்த சர்ப்ரைஸ்.. தமிழக அரசின் அதிரடி
சென்னை : சென்னை ராஜிவ் காந்தி சாலை துரைப்பாக்கம் சந்திப்பில் இருந்து கிழக்கு கடற்கரை சாலையை இணைக்கும் வகையில் பதிய வழித்தட சாலை அமைக்கும் பணி நெடுஞ்சாலைத் துறை சார்பில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சாலை பணிகள் நிறைவு பெற்று போக்குவரத்திற்கு திறந்துவிடப்பட்டால் ஓஎம்ஆர் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஓரளவு குறையும்.
சென்னை நகரம் 2000க்கு முன் இருந்ததையும் இப்போது இருப்பதையும் ஒப்பிட்டு பார்த்தால் மிகப்பெரிய வித்தியாசம் தெரியும். குறிப்பாக மகாபலிபுரம் செல்லும் பழைய சாலையான ராஜீவ் காந்தி சாலையில் பல்வேறு மீனவ கிராமங்களை தன் ஆக்டோபஸ் கரங்களால் அள்ளிக்கொண்டது சென்னை.
மாமல்லபுரத்தினை நோக்கிச் செல்லும் ராஜீவ் காந்தி சாலை தான் இன்றும் பாரம்பரியமான கிராமங்கள், ஐ.டி. கம்பெனிகள் என இரு வேறு உலகங்களைப் பிரிக்கும் எல்லையாக விளங்குகிறது.

ஓஎம்ஆர் சாலை
பன்னாட்டுத் தகவல்தொடர்புக் கம்பெனிகளின் வருகையினால் செம்மஞ்சேரி, பள்ளிக்கரணை, சோழிங்கநல்லூர் போன்ற சிறிய ஊர்களில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டன. ஆறு வழிப் பாதைகளும் வெளிநாட்டுக் கார்களும் வேறு உலகுக்கு அழைத்துச் செல்லும். உண்மையில் சென்னை தானா என்பதை ஓம்ஆர் சாலையில் சென்று பார்த்தால் நிச்சயம் சந்தேகம் வரும்.

நட்சத்திர விடுதிகள்
ஐ.டி. கம்பெனிகள் அடுக்கு மாடிகளில் வந்துவிட்டன. ஆனால் காலங்காலமாக அங்கு வாழ்ந்துவந்த மக்கள் காணாமல் போய்விட்டார்கள் பெரிய வணிக வளாகங்கள், நட்சத்திர விடுதிகள், இறக்குமதியான கார்கள், என பார்க்கவே வெளிநாடாக மாறிவிட்டது. ஆனால் போக்குவரத்து கட்டமைப்புகள் எவ்வளவு ஏற்படுத்தினாலும் அதை சமாளிக்க முடியாத அளவிற்கு வாகன பெருக்கம் மிகுந்துவிட்டது. சுமார் ஒரு லட்சம் பேர் வேலைசெய்யும் பகுதிகளான பெருங்குடியும், தரமணியும், வேளச்சேரியும், சோழிங்கநல்லூரும், செம்மஞ்சேரியும் வாகனங்களால் தினசரி திணறுகின்றன.

திணறும் மக்கள்
கொரோனா லாக்டவுன் காரணமாக சற்று ஆசுவாசப்பட்ட சாலைகள் இப்போது பழையபடி மூச்சுத்திணறி வருகின்றன. சென்னை ராஜிவ் காந்தி சாலையில் துரைப்பாக்கம் சந்திப்பு மிக முக்கியமான இடம் ஆகும். இந்த பகுதியைக் கடந்தால் தான் சென்னைவாசிகள் பல்வேறு ஐடி நிறுவனங்களை அடைய முடியும். ஆனால் வாகன நெரிசல் என்பது கடுமையாக இருக்கும் . குறிப்பாக ஈசிஆர் சாலைக்கு செல்லும் பகுதிகள் மிக கடுமையான நெரிசலில் திணறும்.

விறுவிறுப்பு
இதன் காரணமாகவே சென்னை ராஜிவ் காந்தி சாலை துரைப்பாக்கம் சந்திப்பில் இருந்து கிழக்கு கடற்கரை சாலையை இணைக்கும் வகையில் பதிய வழித்தட சாலை அமைக்கும் பணி நெடுஞ்சாலைத் துறை சார்பில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

கட்டுமானப்பணிகள்
இதேபோல் சென்னை ராஜீவ் காந்தி சாலையில் ரூ.108.13 கோடி மதிப்பில் இந்திரா நகர் சாலை சந்திப்பு, டைடல் பார்க் சந்திப்புகளில் நடைபெற்றுவரும் ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டுப் பணிகளையும், 'யூ'வடிவ மேம்பாலங்கள், ஈசிஆர் சாலைப் பிரிவில் நடை மேம்பாலம், பக்கிங்காம் கால்வாய் குறுக்கே கூடுதல் பாலம் ஆகியவை கட்டப்படுகிறது. மத்திய கைலாஷ் முதல் சிறுசேரி வரை முக்கிய 5 சாலைகளின் சந்திப்பில் சுமார் ரூபாய் 500 கோடி மதிப்பில் மேம்பாலங்கள் கட்ட தமிழக அரசு ஆய்வு செய்து வருகிறது. இந்த பணிகள் நிறைவு பெற்றால் ராஜீவ் காந்தி சாலை இன்னமும் வேறு உலகத்திற்கு செல்லும்.

இரண்டடுக்கு மேம்பாலம்
இதனிடையே சென்னை வேளச்சேரியில் கட்டப்பட்டு வரும் இரண்டடுக்கு மேம்பாலம் பணிகள் குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் அமைச்சர் ஏ.வ.வேலு இன்று கேட்டறிந்தார். வரைபடத்தை பார்த்து அதிகாரிகள் அமைச்சருக்கு விளக்கமளித்தார்ர்கள். கடந்த 5 ஆண்டுகளுக்கு மேல் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணியின் ஒரு பகுதி அதாவது தரமணியில் இருந்து வேளச்சேரி 100 அடி சாலை வந்து இறங்கும் பகுதி 90% பணிகள் முடிவடைந்துள்ளன. அதை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.












Click it and Unblock the Notifications