காலியாகும் சென்னை.. பொங்கலுக்காக கிளம்பிய 6.40 லட்சம் பேர்.. ஸ்பெஷல் பஸ்கள், ரயில்கள் இன்றும் உண்டு
சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி, சென்னையில் இருந்து கடந்த 3 நாட்களில் இயக்கப்பட்ட சிறப்பு பேருந்து, ரயில்கள் உள்ளிட்டவை மூலம் 11.50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்கு பயணித்துள்ளனர். இன்றும் பயணிகள் கூட்டம் அதிகமாகும் என்கிறார்கள்.
பொங்கல் பண்டிகை நாளை 14-ந்தேதி கொண்டாடப்படுகிறது. மறுநாள் மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இதையொட்டி பொங்கல் பண்டிகையை சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டாட கடந்த சில நாட்களுக்கு முன்பிருந்தே சென்னைவாசிகள் தயாராக தொடங்கிவிட்டனர்.

போக்குவரத்து : கடந்த வெள்ளிக்கிழமை முதல் சென்னையில் இருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு ரெயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதி வருகிறது. பொங்கல் பண்டிகையை கொண்டாட மக்கள் அனைவரும் தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுத்தபடி இருக்கிறார்கள்..
பொங்கல், தீபாவளி பண்டிகை காலங்களின்போது, சொந்த ஊர்களுக்கு சென்று அவர்கள் விழாவை சிறப்பித்து வருவது வழக்கம் என்பதால், மக்களின் பயன்பாட்டுக்காக விழாக்காலங்களில் சிறப்பு பஸ்கள், சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சிறப்பு ரயில்களும் அறிவிக்கப்பட்டுள்ளன நிலையில், இதில் ரிசர்வேஷன் இல்லாத ரயில்களும் அடக்கம். தமிழக போக்குவரத்து துறை சிறப்பு ஏற்பாடுகளில், சாதாரண பஸ்களும் அடக்கம்.
ஆம்னி பஸ்கள்: கடந்த 10-ந் தேதி முதல் இன்று காலை வரை 1,90,000 ஆம்னி பஸ்களில் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளதாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாகவே, கோயம்பேடு, மாதவரம், கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டுகளில், கூட்டம் அலைமோதி காணப்படுகிறது..அதேபோல, 10-ந் தேதி முதல் இன்று காலை வரை 1,90,000 ஆம்னி பஸ்களில் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளதாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரைவு பஸ்கள்: கடந்த 3 நாட்களில் இயக்கப்பட்ட 11, 463 சிறப்பு பஸ்களில் சுமார் 6 லட்சத்து 40 ஆயிரத்து 465 பேர் பயணம் செய்துள்ளனர் என்று அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அரசு போக்குவரத்துத்துறை தனது எக்ஸ் வலைதளத்தில், "தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையின் சார்பில், பொங்கல் திருநாளினை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு பஸ்களின் இயக்கம் நேற்று (12.01.2025) நள்ளிரவு 12 மணி நிலவரப்படி, வழக்கமாக இயக்கப்படும் பஸ்களின் எண்ணிக்கையான 2,092 பஸ்களில், 2,092 பஸ்களும், 1,858 சிறப்பு பஸ்களும் ஆக 3,950 பஸ்களில் 2,17,250 பயணிகள் பயணம் செய்தனர். கடந்த 10.01.2025 முதல் 12.01.2025 இரவு 12 மணி வரை 11,463 பஸ்களில் 6,40,465 பயணிகள் பயணித்துள்ளனர்" என்று பதிவிட்டுள்ளது.
ஜிஎஸ்டி சாலை: நேற்றுவரை நீண்ட தூரத்துக்கு வாகனங்கள் அனைத்தும் சென்னையின் பிரதான சாலைகளில் அணிவகுத்து நிற்பதை காண முடிந்தது. இதனால் வாகன ஓட்டிகள் அனைவரும் கடும் சிரமத்துக்குள்ளாகினர். குறிப்பாக ஜிஎஸ்டி சாலையிலும் கடுமையாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. எனினும் போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை சரிசெய்தவண்ணம் இருந்ததால், பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.
சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் உள்ளிட்ட ரயில்வே ஸ்டேஷன்களில் நேற்று காலை முதலே மக்கள் கூட்டத்தை காண முடிந்தது. சென்னையில் இருந்து தென், மேற்கு மாவட்டங்களுக்கு வழக்கமான இயக்கப்பட்ட விரைவு ரயில்கள், சிறப்பு ரயில்கள் உள்பட பெரும்பாலான ரயில்கள் நிரம்பி வழிவதை பார்க்க முடிந்தது.
ரயில்வே ஸ்டேஷன்கள்: வழக்கமான விரைவு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாதவர்கள், சிறப்பு ரயில்களில் முன்பதிவு செய்து, சொந்த ஊருக்கு புறப்பட்டனர்.
மேலும், விரைவு ரயில்களில் முன்பதிவில்லாத பெட்டிகளில் நெரிசலுடன் பயணம் மேற்கொண்டார்கள்.. இதனிடையே, தாம்பரத்தில் இருந்து சிறப்பு ரயிலுக்கு தவறான பயணச்சீட்டு வழங்கப்பட்டதால் ரயில்வே போலீஸாரை முற்றுகையிட்டு பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் சமாதானம் செய்து, ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர்.
இன்று அதிகரிக்கும்: கடந்த 3 நாட்களில் சென்னையிலிருந்து அரசு பஸ்களில் 6 லட்சம் பேரும், ரயில்களில் 4 லட்சம் பேரும், ஆம்னி பஸ்களில் 1.50 லட்சம் பேரும் என சுமார் 11.50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்கு பயணமாகியுள்ளனர். இன்றைய தினமும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. நாளை முதல் தொடர் பண்டிகை கொண்டாடப்படுவதால் இன்று மேலும் அதிகமானோர் பயணிக்க வாய்ப்பிருப்பதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பொங்கல், மகரவிளக்கு பூஜையையொட்டி பயணிகளுக்காக சென்னையில் இருந்து இன்றும் சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து திருவனந்தபுரத்துக்கு இன்று இரவு சிறப்பு ரெயில் (06151) இயக்கப்படுகிறது. இன்று இரவு 11.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில், திருவனந்தபுரத்துக்கு மறுநாள் மதியம் 2 மணிக்கு சென்றடைகிறது. இந்த ரெயிலானது விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, சாத்தூர், கோவில்பட்டி, நெல்லை, வள்ளியூர், நாகர்கோவில் வழியாக திருவனந்தபுரம் செல்கிறது.












Click it and Unblock the Notifications