சென்னை ரயில் நிலையத்தில் பட்டப்பகலில் செயின் பறிப்பு.. சிசிடிவி காட்சியால் போலீசில் சிக்கிய இளைஞர்
சென்னை: சென்னை: சென்னை பெருங்குடி பறக்கும் ரயில் நிலையத்தில் இருக்கையில் தனியாக அமர்ந்திருந்த பெண்ணிடம் பட்டப்பகலில் தங்கச் செயினை இளைஞர் ஒருவர் பறித்து சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்ணின் இருக்கையில் அருகே நைசாக அம்ர்ந்த இளைஞர், கண்ணிமைக்கும் நேரத்தில் அவரிடம் இருந்து தங்கச்செயினை பறித்துவிட்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகி உள்ளது. இதனை வைத்து போலீசார் அந்த நபரை திருவான்மியூர் அருகே கைது செய்தனர்.
நகைப்பறிப்பு சம்பவங்கள் அவ்வப்போது ஆங்காங்கே நடைபெற்று கொண்டு தான் இருக்கின்றன. தனியாக, ஆள் நடமாட்டம் இல்லாத இடங்கள் மற்றும் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் இது போன்ற சம்பவங்கள் நடக்கின்றன. இந்த நிலையில் நேற்று மாலை சென்னை பெருங்குடி பறக்கும் ரயில் நிலையத்தில் தனியாக அமர்ந்திருந்த பெண் ஒருவரிடம் பட்டப்பகலில் இளைஞர் ஒருவர் திட்டமிட்டு நகைப்பறித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நைசாக பேச்சு கொடுத்தார்
நேற்று மாலை சென்னை பெருங்குடி ரயில் நிலையத்தில் கோட்டூர்புரத்தை சேர்ந்த ஆசிரியர் ரோஸி என்பவர் ரயிலுக்காக காத்திருந்தார். பிளாட்பார்மில் உள்ள இருக்கையில் அமர்ந்து இருந்தார். பெரிய அளவில் ரயில் நிலையத்தில் கூட்டம் இல்லை. இவர் மட்டுமே தனியாக இருந்ததாக தெரிகிறது. இதனை நோட்டமிட்ட இளைஞர் ஒருவர் நைசாக ரோஸியிடம் பேச்சு கொடுத்தார்.
பின்னர் அந்த பெண் அமர்ந்திருந்த இருக்கையிலேயே பக்கத்தில் அமர்ந்தார். அந்த பெண் வேறு பக்கம் பார்க்கும் போது நைசாக கழுத்தில் அணிந்திருந்த செயினை பறித்தார். உடனடியாக சுதாரித்து எழுந்த அந்த பெண் நகையை பறிக்க விடாமல் தடுக்க முயற்சித்தார். எனினும் அந்த இளைஞர் நகையை பறித்துக்கொண்டு அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பி சென்றார்.
கைது செய்த போலீசார்
இதனால் செய்வதறியாது திகைத்த அந்த பெண் உதவி கேட்டு கத்தி சத்தம் போட்டார். எனினும் அருகில் யாரும் இல்லாததால் அந்த நபர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். எனினும் போலீசார் அவரை விரட்டி சென்றனர். ஆனால் பிடிக்க முடியவில்லை. இது குறித்து ரோஸி திருவான்மியூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். மேலும் இது தொடர்பான சிசிடிவி வீடியோ காட்சிகளையும் ஆய்வு செய்தனர். இந்த நிலையில் இன்று இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.
இதனை தொடர்ந்து போலீசார் ரயில் நிலைய நுழைவு வாயிற்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து அந்த நபர் எந்த வழியாக சென்றார் என்பதை கண்டறிந்தனர். இதையடுத்து திருவான்மியூர் போலீசார் அந்த நபரை கைது செய்தனர். அவர் பெயர் சௌந்தர் என்பதும் விழுப்புரத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. மீன் வியாபாரம் செய்து வரும் இவரை மனைவி பிரிந்து சென்றுவிட்டார்.
இதையடுத்து நகைப்பறிப்பு, செல்போன் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். குன்றத்தூர் காவல் நிலையத்திலும் இவர் மீது வழக்கு நிலுவையில் உள்ளது தெரியவந்தது. இதையடுத்து அந்த நபரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
பொதுமக்கள் கோரிக்கை
சென்னை பறக்கும் ரயில் நிலையத்தில் இன்று அந்த பெண் உதவி கேட்டு சத்தம் போட்ட நிலையில், அந்த ரயில் நிலையத்தில் யாருமே இல்லை என்பதும் தெரியவந்துள்ளது. ஒரே ஒரு பயணி மட்டுமே அந்த ரயில் நிலையத்தில் இருந்துள்ளார். அவரும் தூரத்தில் இருந்துள்ளார். இதனை நோட்டமிட்டே அந்த நபர் தைரியமாக நகைப்பறிப்பில் ஈடுபட்டுள்ளார்.
இதேபோன்று சென்னையில் ஒரு சில ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அதிகம் இல்லை என்றும் தனியாக வரும் பயணிகள் அந்த நேரத்தில் ஒருவித அச்சத்திலேயே இருக்கக்கூடிய நிலைமை இருப்பதாகவும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். எனவே ரயில் நிலையங்களில் பாதுகாப்புக்கு போலீசார் போடவேண்டும் என்றும் கண்காணிப்பு கேமிராக்கள் வேலை செய்யும் வகையில் வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை ரயில் நிலையத்தில் பட்டப்பகலில் பயணியிடம் நகைப்பறிக்கப்பட்ட சம்பவம் பயணிகள் மத்தியில் கடும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications