தலைநகரில் ஷாக்.. ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்ட இளைஞர்! கொலையாளிகளைத் தேடும் போலீஸ்
சென்னை: திருவொற்றியூரில் மருந்து விற்பனை பிரதிநிதி ஒருவர் மர்ம கும்பலால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பைக்கில் சென்ற அவரை வழிமறித்து தாக்கிய கும்பல், முகத்தில் அரிவாளால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளது. கஞ்சா விற்பனையில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
சென்னை திருவொற்றியூர், காலடிப்பேட்டை, வள்ளலார் நெடுஞ்சாலை பகுதியைச் சேர்ந்தவர் பவித்ரன் (34). இவர் மருந்து விற்பனை பிரதிநிதியாகப் பணியாற்றி வந்தார். இந்நிலையில், நேற்று இரவு காலடிப்பேட்டை வன்னியர் தெரு வழியாக பைக்கில் சென்றுகொண்டிருந்தார்.

அப்போது இரண்டு பைக்குகளில் வந்த ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல், பவித்ரனை வழிமறித்துள்ளது. அவர்கள் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் அவரைத் தாக்க முயன்றுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பவித்ரன், தனது பைக்கை அங்கேயே போட்டுவிட்டு உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடியுள்ளார்.
ஆனால், அந்தக் கும்பல் அவரை விடாமல் துரத்திச் சென்றுள்ளது. பின்னர் பவித்ரனைச் சுற்றி வளைத்த மர்ம நபர்கள், அவரது முகத்தில் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இந்தத் தாக்குதலில் பலத்த காயமடைந்த பவித்ரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருவொற்றியூர் போலீசார் உடனடியாக அங்கு விரைந்து சென்றனர்.
உயிரிழந்த பவித்ரனின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், கொலையில் தொடர்புடைய மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.
பவித்ரன் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், கஞ்சா விற்பனை தொடர்பாக ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
அதே எநேரத்தில் கொலைக்கான உண்மையான காரணம் என்ன? இதில் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. திருவொற்றியூரில் நடந்த இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications
