சென்னை அண்ணா அறிவாலயத்தில் மது பாட்டில்களை வீசிய அதிமுக முன்னாள் நிர்வாகி.. சொன்ன காரணம்தான் ஹைலைட்!
சென்னை: திமுக தலைமை அலுவலகமான சென்னை அண்ணா அறிவாலயத்தின் மீது இன்று அதிகாலையில் மது பாட்டில் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மது பாட்டில்களை வீசிய நபரை பிடித்து தேனாம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தினர். அவர் சொன்ன காரணம் தான் ஹைலைட்.
சென்னை தேனாம்பேட்டையில் அண்ணா சாலையில் அமைந்துள்ளது திமுகவின் கட்சி தலைமையகமான அண்ணா அறிவாலயம். தமிழக அரசியலில் மிக முக்கியமான அதிகார மையமாக விளங்கும் இடம் அண்ணா அறிவாலயம். இந்நிலையில் இன்று அதிகாலையில் அண்ணா அறிவாலயத்தில் நடந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இன்று அதிகாலை சுமார் 5 மணியளவில் மர்ம நபர் ஒருவர் இரு சக்கர வாகனத்தில் சென்னை தேனாம்பேட்டையில் அமைந்துள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் பகுதிக்கு வந்து, அண்ணா அறிவாலயத்திற்குள் நுழைய முயன்றுள்ளார். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்து பாதுகாவலர்கள் அவரை தடுத்து நிறுத்தியுள்ளனர்.
அந்த நபர் குடி போதையில் இருந்துள்ளார். இதனால் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. மது போதையில் இருந்த நபர் போலீசார் வருவதை அறிந்து திடீரென கையில் வைத்திருந்த 2 பீர் பாட்டில்களை தூக்கி அண்ணா அறிவாலயம் நோக்கி வீசியதோடு “மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு” எனக் கோஷம் போட்டுள்ளார்.
இதையடுத்து, அந்த நபரை பிடித்த தேனாம்பேட்டை போலீசார், காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்துள்ளனர். விசாரணையில் அவர் சென்னை கண்ணகி நகர் பகுதியைச் சேர்ந்த கோவர்தன் என்பது தெரியவந்தது. கோவர்தன் முன்னாள் அதிமுக நிர்வாகி என்பதும் தற்போது எந்த பொறுப்பிலும் இல்லை என்பதும் தெரிய வந்துள்ளது.
எதற்காக மது பாட்டிலை வீசினீர்கள் என போலீசார் அவரிடம் கேட்டதற்கு, “மதுவினால் வீட்டில் பிரச்சனை ஏற்படுகிறது. மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு. எனவே உடனடியாக திமுக அரசு மது விற்பனையை தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி மதுபாட்டிலை வீசினேன்” எனத் தெரிவித்துள்ளார்.
மது போதையிலேயே வந்து அண்ணா அறிவாலயத்தில் மது பாட்டிலை வீசி, மதுவுக்கு எதிராக கோஷமிட்ட நபரால் சென்னை தேனாம்பேட்டை பகுதியில் இன்று அதிகாலையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications