கீழே கிடந்த ரூ.7 ஆயிரம்.. போலீஸில் ஒப்படைத்த பள்ளி மாணவிகள்.. பாராட்டிய சென்னை போலீஸ் கமிஷனர்
சென்னை: சாலையில் கிடந்த ரூ.7,700 ரொக்கம் அடங்கிய பர்சை காவல் நிலையத்தில் ஒப்படைத்த 5-ம் வகுப்பு அரசுப் பள்ளி மாணவிகளை சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார்.
ஏழ்மையான குடும்பப் பின்னணி கொண்ட இந்த சிறுமிகள், நேர்மையை சற்றும் விட்டுக்கொடுக்காமல் இந்த செயலை செய்ததற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
சுயநலமும், நேர்மையற்ற குணமும் கொண்ட மனிதர்களுக்கு மத்தியில் இந்த சிறுமிகளின் செயலை பார்க்கும் போது எதிர்கால இந்தியா குறித்து நம்பிக்கை பிறப்பதாவும் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகிறார்கள்.

கீழே கிடந்த 'பர்ஸ்'
சென்னை ஆர்.கே. நகர் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வரும் 4 மாணவிகள் கடந்த வாரம் பள்ளி முடிந்து வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது சாலையோரத்தில் ஒரு பர்ஸ் விழுந்து கிடந்ததை அந்த சிறுமிகள் பார்த்துள்ளனர். இதையடுத்து, அவர்கள் அந்த பர்ஸை எடுத்து பார்த்த போது அதில் ரூ.7,705 ரொக்கம் இருந்துள்ளது.

ஏமாற்ற நினைத்த நபர்கள்
பின்னர் அவர்கள் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் சென்று, இந்த பர்ஸ் யாருடையது என்று கேட்டுள்ளனர். அப்போது சிலர், அந்த பர்ஸ் தங்களுடையது என்று கூறியுள்ளார். ஆனால் அந்த சிறுமிகளோ, பர்ஸுக்குள் என்னென்ன இருக்கிறது என்று சொன்னால்தான் பர்ஸை தருவோம் எனக் கூறியுள்ளனர். இதில் பலர் தவறாக கூறியதால் அந்த சிறுமிகள் அவர்களிடம் பர்ஸை தரவில்லை.

நேர்மை குணத்தை விடாமல்..
அப்போது அங்கிருந்தவர்கள், "பர்ஸை தவறவிட்டவர்கள்தான் இங்கு இல்லையே.. நீங்களே அதில் உள்ள பணத்தை எடுத்துக்கொள்ளுங்கள்" எனக் கூறியிருக்கிறார்கள். ஆனால், அந்த சிறுமிகளோ அவர்கள் சொல்வதை கேட்காமல் அருகில் உள்ள காவல் நிலையத்தில் சென்று அந்த பர்ஸை ஒப்படைத்தார். சிறுமிகளின் நேர்மையை கண்டு வியந்த போலீஸார், இதுகுறித்து காவல் ஆணையர் அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

நேரில் அழைத்து பாராட்டு
இந்நிலையில், அந்த சிறுமிகளின் நேர்மை குணத்தை அங்கீகரிக்க முடிவு செய்த சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், அவர்களை தனது அலுவலகத்துக்கு வருமாறு அழைத்திருந்தார். அதன்படி, இன்று காவல் ஆணையர் அலுவலகத்துக்கு சென்ற அந்த சிறுமிகளை வெகுவாக பாராட்டிய சங்கர் ஜிவால், அவர்களுக்கு பரிசுகளையும், நற்சான்றிதழ்களை வழங்கியும் பாராட்டினார்.












Click it and Unblock the Notifications