பிறந்நாளில் லீவ்...காவலர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சென்னை மாநகர காவல்துறை ஆணையர்
பிறந்தநாளில் விடுமுறை எடுத்துக்கொண்டு குடும்பத்துடன் மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள் என்று சென்னை மாநகர காவலர்களுக்கு காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் இன்ப அதிர்ச்சி தரும் அறிவிப்பினை வெளியிட்டுள்ளா
சென்னை: சென்னை மாநகர காவல்துறையில் பணியாற்றும் காவலர்களுக்கு அவர்களது பிறந்தநாள் அன்று விடுமுறை வழங்க காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். பிறந்தநாளுக்கு முன்தினம் காவலர்களுக்கு காவல்நிலையத்தில் வைத்து மற்ற காவலர்கள் வாழ்த்து தெரிவிக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
கொரோனா லாக்டவுன் காலத்தில் காவல்துறையினர் இரவு பகலாக கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அவர்களுக்கு கடும் மனஉளைச்சல் ஏற்பட்டு, சில காவலர்கள் பொது மக்களிடம் மிகவும் கடுமையாக நடந்து கொள்கிறார்கள் என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.

பொதுவாகவே காவல்துறையினரின் பிறந்தநாள் மற்றும் திருமணநாளின் போது குடும்பத்தினருடன் செலவிட முடியாத சூழ்நிலை நிலவிவருகிறது. இது போன்ற நிகழ்வுகளில் கூட வீட்டில் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக இருக்க முடியாமல் தொடர்ந்து பணி செய்து வருவதால் காவலர்கள் ஒருவித மன அழுத்தத்திற்கு ஆளாகி வருகின்றனர். காவல்துறையில் பணிபுரியும் சிலர் பணிச்சுமை காரணமாக தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் நடைபெறுகின்றன.
காவல்துறையினரின் மன அழுத்தத்தை போக்கும் விதமாக விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் காவலர்களின் திருமணநாள் மற்றும் பிறந்தநாள் அன்று அவர்களுக்கு விடுமுறை அளிப்பதோடு வாழ்த்து அட்டைகளைக் காவலர்களின் வீட்டுக்கே அனுப்பி வைக்கும் திட்டத்தை கடந்த ஜூலை மாதம் தொடங்கி வைத்தார். இது காவல்துறையினர் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றது.
காவலர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் செயல்படுவதன் மூலம் காவலர்களின் மன அழுத்தம் நீங்கும். இது போன்ற நாட்களில் குடும்பத்தினருடன் அவர்கள் மகிழ்ச்சியாக இருந்து விட்டு மீண்டும் பணிக்குத் திரும்பியவுடன் நல்ல மனநிலையுடன் மகிழ்வோடு பணிகளில் ஈடுபடுவார்கள் என்ற நோக்கத்தில் இத்திட்டத்தை அறிவித்துள்ளதாக விழுப்புரம் மாவட்ட எஸ்.பி ராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு சென்னை காவலர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் விதமாக அமைந்துள்ளது. சென்னை காவல்துறை காவலர்களுக்கு அவர்களது பிறந்தநாள் அன்று விடுமுறை வழங்க காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
பிறந்தநாளுக்கு முன்தினம் காவலர்களுக்கு காவல்நிலையத்தில் வைத்து மற்ற காவலர்கள் வாழ்த்து தெரிவிக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். காவலர்களின் பணிச்சுமை மற்றும் மன அழுத்தத்தை குறைக்கும் விதத்தில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications