ஹெல்மெட் போடாட்டி போலீசுக்கும் இனி சிக்கல் தான்.. அதிரவைத்த சென்னை மாநகர காவல் ஆணையரின் உத்தரவு
சென்னை: இருசக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற சட்டத்தை தீவிரமாக செயல்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் அனைத்து போலீசாரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும், அணியாத போலீஸ் மீது நடவடிக்கை எடுக்கவும் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.
இருசக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற சட்டத்தை அரசு தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அன்று முதலே தமிழகம் முழுவதும் போலீசார் ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களை விரட்டி விரட்டி பிடித்து அபாரதம் வசூலித்து வருகிறார்கள்.

சென்னை,கோவை, மதுரை, திருச்சி,சேலம் என அனைத்து மாநகரங்களிலும் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையை தீவிரப்படுத்தி உள்ளார்கள். குறிப்பாக சென்னையில் மிகத்தீவிரமாக வாகன சோதனை நடந்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போலீசாருடன் சிலர் சண்டையும் போடுகிறார்கள்.
இதனிடையே எங்களை ஹெல்மெட் அணியச் சொல்லி கட்டாயப்படுத்தும் போலீசார் ஹெல்மெட் அணிகிறார்களா, அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று பொதுமக்கள் பலரும் முணுமுணுத்துபடி சென்று வருகிறார்கள். இதனிடையே சென்னை உயர்நீதிமன்றம் அண்மையில் பிறப்பித்த உத்தரவில் போலீசாரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும் இல்லாவிட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது.
இதையடுத்து சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் இன்று வெளியிட்ட உத்தரவில், சென்னை மாநகரில் உள்ள அனைத்து போலீசாரும் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். ஹெல்மெட் அணியாத போலீசார் மீது போக்குவரத்து போலீசாருக்கு வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.
இதனால் பொதுமக்கள் மட்டுமின்றி, ஹெல்மெட் போடாமல் சென்றால் இனி போலீசுக்கும் சிக்கல் தான் என்பது உறுதியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications