ஆன்லைன் மோசடி.. சென்னையில் ஒரே ஆண்டில் ரூ.26 கோடி பணம் மீட்பு.. சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை
சென்னை: சென்னை பெருநகர காவல் சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையங்களின் துரித நடவடிக்கையால் டிசம்பர் மாதத்தில் மட்டும் புகார்தாரர்களின் இழந்த ரூ.1.04 கோடி மீட்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டது. கடந்த 2025 ஆம் ஆண்டு மட்டும் சைபர் மோசடியில் பொதுமக்கள் இழந்த ரூ.25.97 கோடி மீட்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் சைபர் மோசடிகள் அதிகம் நிகழ்ந்து வருகின்றன. நம் நாட்டில் கடந்த 6 ஆண்டுகளில் நடைபெற்ற பல்வேறு ஆன்லைன் மோசடிகள் மூலம் இந்தியர்கள் ரூ.52,976 கோடியை இழந்துள்ளனர். கடந்த ஆண்டில் மட்டும் ரூ.19,812 கோடியை இந்தியர்கள் இழந்தனர். கடந்த ஆண்டில் மகாராஷ்டிரா வில் சைபர் மோசடி புகார்கள் அதிகளவில் பதிவாயின. அங்கு ரூ.3,203 கோடியை மக்கள் இழந்துள்ளனர். அடுத்ததாக கர்நாடகா 2,413 கோடி ரூபாயையும், தமிழகத்தில் 1,897 கோடி ரூபாயையும் மக்கள் ஆன்லைன் மோசடிகளால் இழந்துள்ளனர்.

சைபர் குற்றங்களால் பணத்தை இழந்த பொதுமக்களின் புகார்கள் மீது சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவின் பேரில், மத்திய குற்றப்பிரிவு மற்றும் 4 மண்டலங்களில் உள்ள சைபர் கிரைம் காவல் நிலையங்கள் இணைந்து மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையால் கடந்த டிசம்பர் மாதம் மட்டும் ரூ.1.04 கோடி பணத்தை சைபர் கிரைம் போலீசார் மீட்டுள்ளனர்.
கடந்த டிசம்பர் மாதத்தில், மத்திய குற்றப்பிரிவில் 65, தெற்கு மண்டலம் 50, வடக்கு மண்டலம் 21, கிழக்கு மண்டலம் 30, மேற்கு மண்டலம் 26 என மொத்தம் பெறப்பட்ட 192 புகார் மனுக்களில், 88 மனுக்கள் மீது உடனடி விசாரணை நடத்தப்பட்டு, மொத்தம் ரூ.1,04,87,793 பணம் மீட்கப் பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த 2025 ஜனவரி 1 ஆம் தேதி முதல் டிசம்பர் 31 ஆம் தேதி வரை ஓர் ஆண்டில் மட்டும் ஒட்டுமொத்தமாக ரூ.25,97,01,176 பணம், சைபர் மோசடி கும்பல்களிடம் இருந்து மீட்கப்பட்டு பொதுமக்களிடம் வழங்கப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும், பொதுமக்கள் இணையவழி பணப் பரிமாற்றங்களை மேற்கொள்ளும்போது, மிகுந்த கவனத்துடன், நம்பகத் தன்மையை உறுதி செய்த பின்னரே ஈடுபட வேண்டும் என்றும், ஏதேனும் சைபர் மோசடி நடந்தால் உடனடியாக 1930 என்ற அவசர எண்ணை அழைக்கலாம் என்றும் சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications