நீதிமன்றம் அனுமதி கொடுத்தால் ஓபிஎஸ்க்கு பாதுகாப்பு..சென்னை காவல்துறை விளக்கம்
அதிமுக அலுவலகம் ஓ. பன்னீர்செல்வம் செல்ல நீதிமன்றத்தில் அனுமதி கேட்டு வருமாறு காவல்துறை சார்பாக விளக்கம் அளிக்கப்பட்டு இருக்கிறது.
அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு பொதுக்குழு செல்லும் என தீர்ப்பு வழங்கியது. இதைத் தொடர்ந்து அதிமுக தலைமை அலுவலகத்துக்கு நேற்று எடப்பாடி பழனிசாமி சென்றார்.
இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் அவர் முதன்முறையாக நேற்று தலைமை அலுவலகத்துக்கு சென்றார். ஏராளமான அதிமுகவினர் எடப்பாடி பழனிச்சாமிக்கு வரவேற்பு அளித்தனர்.

ஓ.பன்னீர் செல்வம்
இதனிடையே ஓ.பன்னீர் செல்வமும் அதிமுக அலுவலகத்துக்கு செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓ.பன்னீர் செல்வம் அதிமுக தலைமை அலுவலகம் செல்ல உள்ளதாகவும் அதற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் சென்னை ராயப்பேட்டை காவல் நிலையத்தில் ஜே.சி.டி.பிரபாகர் மனு அளித்துள்ளார்.

ஓபிஎஸ் ஆதரவாளர் மனு
ஜேசிடி பிரபாகர் அளித்த மனுவில், சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் தீர்ப்பின்படி ஓ.பன்னீர் செல்வத்தின் ஒருங்கிணைப்பாளர் பதவி ரத்தாகவில்லை. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் தொடர்வதால் ஓபிஎஸ் கட்சி அலுவலகம் சென்று பணியாற்ற எந்த தடையும் இல்லை. அதிமுக அலுவலகத்திற்கு ஒருங்கிணைப்பாளர் செல்லும்போது அவரை வரவேற்க ஏராளமான தொண்டர்கள் கூடும் வாய்ப்புள்ளது. ஏராளமான தொண்டர்கள் அதிமுக அலுவலகத்தில் கூடுவதை பயன்படுத்தி கலவரம் செய்ய சமூக விரோதிகள் திட்டமிட்டுள்ளனர். எனவே உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

காவல்துறை விளக்கம்
ஜேசிபி பிரபாகரன் அளித்திருக்கும் மனு குறித்து காவல்துறை சார்பாக விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. மேலும் நீதிமன்றம் அதிமுக அலுவலகத்தில் பூட்டு சாவியை ஒப்படைக்க சொல்லி இருக்கிறார். அதன் அடிப்படையில் அவர்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது.

நீதிமன்ற அனுமதி தேவை
இந்த நிலையில் நீங்கள் பாதுகாப்பு கேட்டு மனு அளித்திருக்கிறீர்கள் இதுதொடர்பாக நீங்கள் நீதிமன்றம் சென்று நீங்கள் அனுமதி பெற்றுக்கொண்டால் பாதுகாப்பு தர தயாராக இருப்பதாகவும் காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்து ஆலோசனை செய்து பாதுகாப்பு தரப்படும் என்றும் காவல்துறை தகவல் தெரிவித்து இருக்கின்றன.

ராயப்பேட்டை கலவரம்
கடந்த ஜூலை 11ஆம் தேதி அதிமுக அலுவலகத்திலும், அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி தரப்பு ஆதரவாளர்கள் மோதிக்கொண்டதால் வன்முறைக் களமாக மாறியது. இந்நிலையில் மீண்டும் அப்படியொரு சம்பவம் நடந்துவிடக்கூடாது ராயப்பேட்டை பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.












Click it and Unblock the Notifications