கம்ப்ளைண்ட் கொடுத்த பெண்ணுடன் கனெக்சன்.. இன்ஸ்பெக்டர் கண்ணனுக்கு போதாத காலம்! இப்போ வேலையும் காலி!
சென்னை: பக்கத்து வீட்டுக்காரர் தகராறு செய்வதாக காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வந்த இளம் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி குடும்பம் நடத்தியதாக விருகம்பாக்கம் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். கணவன் தவறு செய்வதாக மனைவி தற்கொலைக்கு முயன்றதும் உயர் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
சென்னை விருகம்பாக்கம் பகுதியில் 25 வயது இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது அருகில் வசிக்கும் சிலர் தகராறு செய்வதாக கண்ட்ரோல் ரூமுக்கு புகார் கொடுத்திருக்கிறார். அப்போது விருகம்பாக்கம் சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் கண்ணன் இரவு பணியில் இருந்த போது அங்கு சென்று விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து பிரச்சனையையும் சரி செய்து வைத்திருக்கிறார். இந்த நிலையில் இன்ஸ்பெக்டர் கண்ணனை தொடர்பு கொண்ட அந்த இளம் பெண் வாட்ஸாப் மூலம் நன்றி தெரிவித்திருக்கிறார். தொடர்ந்து இன்ஸ்பெக்டர் கண்ணன் காலை எழுந்தவுடன் அந்த இளம் பெண்ணுக்கு காலை வாழ்த்து தெரிவித்து வந்ததாக சொல்லப்படுகிறது.

தொடர்ந்து தொலைபேசியிலும் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். ஒரு கட்டத்தில் தனக்கு திருமணம் ஆகி விவாகரத்து ஆகிவிட்டது எனவும், தற்போது தனியாகத்தான் வசிக்கிறேன். விருப்பம் இருந்தால் என்னை திருமணம் செய்து கொள்ளலாம் என இன்ஸ்பெக்டர் கண்ணன் சொல்லி இருக்கிறார். அவரது பேச்சை நம்பிய அந்த பெண்ணும் அவரை திருமணம் செய்து கொள்வதாக சம்மதித்திருக்கிறார். இதை அடுத்து இருவரும் பல இடங்களுக்கு சென்று சந்தித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என அந்த பெண் இன்ஸ்பெக்டர் கண்ணனிடம் அடிக்கடி கேட்டு இருக்கிறார். இதனால் இன்ஸ்பெக்டர் கண்ணன் அந்த பெண்ணிடம் பேசுவதை தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் தனது கணவர் வேறு ஒரு பெண்ணுடன் பேசுவதை கண்ணனின் மனைவி கண்டுபிடித்துள்ளார். மேலும் கணவனின் செயலால் அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
பிரச்சனை பெரிதாவதை உணர்ந்த கண்ணன் தனக்கு விவாகரத்து ஆகவில்லை எனவும் தனது மனைவி குழந்தையுடன் ஒன்றாக வசிக்கும் நிலையில் என்னை தொந்தரவு செய்ய வேண்டாம் எனக் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த இளம் பெண் மறுப்பு தெரிவித்து தகராறு செய்திருக்கிறார். மேலும் இளம் பெண்ணின் குடும்பத்தை கண்ணன் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதை அடுத்து அந்த இளம் பெண் வீட்டை காலி செய்து விட்டு மயிலாப்பூருக்கு சென்றிருக்கிறார்.
இதற்கிடையே அந்த இளம் பெண் இன்ஸ்பெக்டர் கண்ணனை தொடர்பு கொள்ள முயன்றிருக்கிறார். ஆனால் அவர் பேசவில்லை என கூறப்படுகிறது. இதை அடுத்து இன்ஸ்பெக்டரின் ஓட்டுநரை தொடர்பு கொள்ள முயன்றுள்ளார் ஆனால் அதுவும் முடியவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அந்த இளம்பெண் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக இன்ஸ்பெக்டர் கண்ணன் மீது ராமாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இதை அடுத்து சென்னை தெற்கு மண்டல இணை கமிஷனர் சிபி சக்கரவர்த்தியிடம் அந்த பெண் புகைப்பட ஆதாரங்கள். வாட்ஸாப் மெசேஜ்களுடன் புகார் அளித்திருக்கிறார். இதை அடுத்து இன்ஸ்பெக்டர் கண்ணனை விசாரணைக்கு ஆஜராகுமாறு இணை கமிஷனர் அழைப்பு விடுத்தும் அவர் ஆஜராகாமல் மெடிக்கல் லீவில் சென்றிருக்கிறார். இதை அடுத்து விசாரணை முடியும் வரை இன்ஸ்பெக்டர் கண்ணனை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உத்தரவிடப்பட்டது. தொடர்ந்து இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்ட நிலையில் இளம் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி இன்ஸ்பெக்டர் ஏமாற்றியது தெரியவந்தது.
மேலும் இது தொடர்பாக அவரது மனைவியும் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் காவல்துறை அதிகாரிகளுக்கு தெரிய வந்தது. இன்ஸ்பெக்டர் கண்ணனுக்கு அவரது கார் ஓட்டுநர்களான காவலர்களும் உடந்தையாக இருந்தது உறுதியான நிலையில் பணியின்போது ஒழுங்கீனமாக நடந்ததாக இன்ஸ்பெக்டர் கண்ணன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதற்கான நோட்டீஸ் அவரது வீட்டில் அளிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications