ஜீ தமிழ் நிகழ்ச்சியில் கண்ணீர் விட்டு அழுத திருநங்கை.. முதலமைச்சர் விஜய் சார்பாக கிடைத்த மறக்க முடியாத கிஃப்ட்
சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சி இந்த வாரம் வழக்கத்தை விட அதிக கவனத்தை ஈர்த்திருக்கிறது. காரணம், நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டிருக்கும் திருநங்கை சூர்யா குட்டி வைத்த ஒரு மனவேதனைக்குரிய வேண்டுகோள் தான். அந்த ஒரு கோரிக்கையே தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில், அதற்கு பதிலளிக்கும் விதமாக முதலமைச்சர் தரப்பில் அமைச்சர் அருண் ராஜா நேரடியாக நிகழ்ச்சிக்கு வந்திருப்பது ரசிகர்களுக்கு மிகப்பெரிய இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது.
டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியின் வரலாற்றில் முதல் முறையாக திருநங்கை போட்டியாளராக சூர்யா குட்டி கலந்து கொண்டது பெரிய வரவேற்பைப் பெற்றது. மேடையில் அவர் தன்னுடைய வாழ்க்கைப் போராட்டங்களை பகிர்ந்துகொண்ட தருணம் பலரையும் நெகிழ வைத்தது.
திருநங்கைகளின் பிரச்சனை
சிறு வயதிலிருந்து சந்தித்த அவமானங்கள், சமூகத்தில் எதிர்கொண்ட நிராகரிப்புகள், வாழ இடம் கூட இல்லாமல் தவித்த நிலை - இதையெல்லாம் மனம் திறந்து பேசிய சூர்யா குட்டி, திருநங்கைகள் எதிர்கொள்ளும் ஒரு மிக முக்கியமான பிரச்சினையையும் வெளிச்சத்துக்கு கொண்டு வந்தார்.

ஜீ தமிழ் பிரபலம் வேண்டுகோள்
"நாங்கள் வீடு தேடி சென்றால் யாரும் வீடு கொடுக்க மாட்டார்கள். ஹாஸ்டலில் தங்க நினைத்தாலும் ஆண்கள், பெண்கள் என்று தனித்தனி வசதிகள் இருக்கின்றன; ஆனால் திருநங்கைகளுக்கென்று தனி ஹாஸ்டல் வசதி எங்கும் இல்லை. அதனால் ஒவ்வொரு மாவட்டத்திலும் எங்களுக்கு தனியாக ஹாஸ்டல்கள் அமைக்க வேண்டும். பாதுகாப்பாக தங்க சில வீடுகளும் கட்டித் தர வேண்டும்" என்று சூர்யா குட்டி மனம் உருகக் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த வேண்டுகோள் அப்போது நிகழ்ச்சியை பார்த்தவர்களை மட்டுமல்லாமல், சமூக வலைதளங்களில் அந்த வீடியோவை பார்த்த பலரையும் நெகிழ வைத்தது.
இந்த வீடியோ இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, இந்த வார டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் அமைச்சர் அருண் ராஜா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டுள்ளார். சாதாரண மனிதர்களின் குரலுக்கும் அரசு செவி சாய்க்கிறது என்பதை உணர்த்தும் வகையில் அவர் மேடையில் தோன்றிய தருணம் நிகழ்ச்சிக்கு புதிய பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக சூர்யா குட்டிக்காகவே அவர் இந்த நிகழ்ச்சிக்கு வந்ததாக கூறப்பட்டிருப்பது, அந்த தருணத்தை இன்னும் சிறப்பாக்கியுள்ளது.

அமைச்சர் கொடுத்த பரிசு
மேடையில் சூர்யா குட்டிக்கு அமைச்சர் அருண் ராஜா ஒரு புடவையை பரிசாக வழங்கியதும் நிகழ்ச்சி உணர்ச்சிப்பூர்வமான தருணமாக மாறியது. அந்த பரிசை கையில் பெற்ற சூர்யா குட்டி கண்கலங்கி, "என் வாழ்க்கையில் இதுவரைக்கும் யாரும் எனக்கு கிப்ட் கொடுத்ததே இல்லை. முதல் முறையாக ஒரு புடவை பரிசாக கிடைத்திருக்கிறது. இது எனக்கு மிகப்பெரிய அங்கீகாரம்" என்று உருக்கமாக பேசியுள்ளார். அந்த தருணம் அங்கிருந்தவர்களையே நெகிழ வைத்ததாக கூறப்படுகிறது.
அதோடு நின்றுவிடாமல், "நீங்கள் வீடு மற்றும் ஹாஸ்டல் வசதி பற்றி வைத்த கோரிக்கையை மாண்புமிகு முதலமைச்சரின் கவனத்திற்கு கண்டிப்பாக கொண்டு செல்வேன். விரைவில் உங்களுக்கு நல்ல செய்தி வரும்" என்று அமைச்சர் அருண் ராஜா உறுதி அளித்திருப்பதும் இந்த நிகழ்ச்சியின் முக்கிய ஹைலைட்டாக மாறியுள்ளது.
ரசிகர்கள் கருத்து
ஒரு ரியாலிட்டி ஷோ மேடையில் பேசப்பட்ட ஒரு வேண்டுகோள், அரசின் கவனத்துக்கே சென்றிருக்கிறது என்ற விஷயம் தற்போது இணையத்தில் பரவலாக பேசப்படுகிறது. இந்த வார எபிசோடில் அமைச்சர் அருண் ராஜா இன்னும் என்னென்ன பேசியிருக்கிறார்? சூர்யா குட்டியின் கோரிக்கைக்கு அடுத்து என்ன நடக்கப் போகிறது? என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.













Click it and Unblock the Notifications