புத்தாண்டு கொண்டாட்டம் -பொதுவிடத்தில் குடித்துவிட்டு கும்மாளமிட்டால் நடவடிக்கை.. போலீஸ் எச்சரிக்கை.!
சென்னை: புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் பொதுவிடங்களில் மது அருந்தி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தினால் கடும் நடவடிக்கை பாயும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தமிழக அரசு அனுமதி மறுத்துள்ள நிலையில் அதனை மீறினால் நடவடிக்கை எடுக்க காவல்துறை தயாராக உள்ளது.
சென்னை மற்றும் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் 31-ம் தேதி மற்றும் 1-ம் தேதி ஆகிய இரண்டு நாட்களும் கண்காணிப்பு பணிகளை போலீஸ் தீவிரப்படுத்தியுள்ளது.

மது அருந்திவிட்டு
ஆங்கிலப் புத்தாண்டை ஒட்டி சென்னை ஈ.சி.ஆர். மற்றும் ஓ.எம்.ஆர். சாலைகளில் 500-க்கும் மேற்பட்ட போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். மேலும், தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கும் பணிகளும் அங்கு நடைபெற்று வருகின்றன. மது அருந்திவிட்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்துகொள்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் போலீஸ் திட்டமிட்டுள்ளது.

பெரு நகரங்கள்
இதேபோல் அரசு அறிவிப்பை மீறி கடற்கரையில் கூடுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யவும் காவல்துறை திட்டமிட்டுள்ளது. சென்னை மட்டுமன்றி திருச்சி, கோவை, மதுரை, சேலம், என மற்ற பெருநகரங்களிலும் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களை கண்காணிப்பு சிறப்புக் குழு பணியமர்த்தப்பட்டுள்ளது.

இரு சக்கர வாகனம்
இதனிடையே புதுச்சேரியில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடையில்லை என்பதால் சென்னையில் இருந்து இரு சக்கர வாகனங்களில் அதிகமான இளைஞர்கள் புதுச்சேரியை நோக்கி படையெடுக்கவும் வாய்ப்புள்ளது. அவர்களுக்கு செக் வைக்கும் விதமாக 31-ம் தேதி மாலை 6 மணிக்கு மேல் ஈ.சி.ஆர். சாலையில் இரு சக்கர வாகனத்தில் வருவோரை திருப்பி அனுப்பவும் திட்டமிடப்பட்டுள்ளது.

சோதனைச் சாவடிகள்
அரசு விதிமுறைகளை மீறும் கேளிக்கை விடுதிகள், ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் புத்தாண்டு தினத்தன்று சென்னையில் பைக் ரேஸ் நடத்த முடியாத வகையில் சோதனைச் சாவடிகளை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications