சென்னையில் மேகவெடிப்பு.. ஒரு மணி நேரத்தில் 100 மி.மீக்கும் மேல் மழை பதிவு!
சென்னை: சென்னையில் கடந்த ஒரு மணி நேரத்திற்கும் மேல் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் பல இடங்களில் 100 மி.மீக்கும் அதிகமாக மழை பதிவாகியிருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து தனது x பக்கத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது, "சென்னையின் இந்த ஆண்டுக்கான முதல் மேகவெடிப்பு ஏற்பட்டிருக்கிறது. பல இடங்களில் ஒரு மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் 100 மி.மீ-க்கு மேல் மழை பெய்துள்ளது. வடசென்னையிலும் வடமேற்கு சென்னையிலும் கொட்டித் தீர்த்த இதே கடுமையான மழை, இப்போது தென் சென்னைக்கு வரவிருக்கிறது" என கூறியுள்ளார்.

சென்னை சென்ட்ரல் தொடங்கி எழும்பூர், சேத்துப்பட்டு, திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், திருவொற்றியூர், கொருக்குப்பேட்டை, தண்டையார்பேட்டை, ஐஓசி, கோயம்பேடு, அண்ணாநகர், கொளத்தூர், வில்லிவாக்கம், பாடி, அயனாவரம் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேல் கனமழை பெய்து வருகிறது.
முன்னதான சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்திருந்த அறவிப்பில், "மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தொடங்கி செப்.1 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
செப்.2-5 வரை தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:
அதிகபட்ச வெப்பநிலை மாறுதலின் போக்கை பொறுத்தவரை இன்றும் நாளையும் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3" செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும்.
இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாட்டை பொறுத்தவரை இன்றும் நாளையும் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், அதிகபட்ச வெப்பநிலை 2-3 செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
இன்று (30-08-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில், லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28* செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை (31-08-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில், லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என தெரிவிக்கப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications