"சக்கரம்" சென்னைக்கு மேல சுத்துது.. செம மழை வருது.. ஓசூர் மக்களே, தமிழ்நாடு வெதர்மேன் சொல்றதை கேளுங்க
சென்னை: சென்னையில் திடீர் மழை பெய்து வரும்நிலையில், தமிழ்நாடு வெதர்மேன் ட்வீட்டினை பதிவிட்டுள்ளார்.. இதனால் சென்னைவாசிகள் மேலும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அக்னி நட்சத்திரம் விடைபெற்ற நிலையில் தமிழகமெங்கும் நல்ல மழை பெய்து வருகிறது.. இனியும் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், "தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கனமழை: நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
ஜூன் 1 மற்றும் ஜுன் 2 ஆம் தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஜூன் 3 ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெதர்மேன்: இதனிடையே, இன்று காலை, தமிழ்நாடு வெதர்மேன் ஒரு ட்வீட் பதிவிட்டிருந்தார்.. அதில், கடல் காற்று முன் கூட்டியே வீசத் தொடங்கிவிட்டதால் சென்னை கடலோர பகுதிகளில் வெயில் குறையும். ஆயினும் மீனம்பாக்கம், அண்ணா நகர் மேற்கு, போரூர், முகப்பேர், வளசரவாக்கம், மணப்பாக்கம், செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் வெயில் சுட்டெரிக்கும். வேலூர்- சென்னை பெல்ட்தான் நேற்று தமிழகத்திலேயே அதிக வெப்பமான பகுதியாகும். அதே நிலை இன்றும் தொடரும்" என்று பதிவிட்டிருந்தார்.
இதையடுத்து, இன்று மாலையில், சென்னையில் கருமேகங்கள் சூழ்ந்து பலத்த மழை கொட்டியது.. சென்னை புறநகர் பகுதியான ஆவடி, திருநின்றவூர், பட்டாபிராம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்ய துவங்கியது.. இதனால் சென்னையில் குளிர்ச்சியான வானிலை நிலவி வருவதால், சென்னைவாசிகள் சற்று நிம்மதி பெருமூச்சு விட்டு வருகின்றனர்..
புயல் காற்று: இந்நிலையில், தமிழ்நாடு வெதர்மேன் இன்னொரு ட்வீட்டினை பதிவிட்டுள்ளார்.. அதில், "ஆந்திராவில் இருந்து தமிழக எல்லையை நோக்கி வந்த புயல் காற்று வலுவிழந்து ஓசூருக்கும், சென்னைக்கும் மேலே சுற்றி வருகிறது. இதனால் அடுத்த சில மணிநேரங்களில் சென்னையில் பல பகுதிகளில் சூறைக்காற்றுடன் மழை பெய்யப் போகிறது. ஓசூரில் பயங்கர சூறைக்காற்றுடன் கனமழை வெளுத்து வாங்க போகிறது" எனத் தெரிவித்துள்ளார்.
சூறாவளி: ஏற்கனவே சென்னையில் மழை பெய்து வரும்நிலையில், வெதர்மேனின் இந்த அறிவிப்பு மேலும் மகிழ்ச்சியை தந்து வருகிறது. அந்த வகையில், சென்னையில் திருநின்றவூர், அம்பத்தூர், ஆவடி, கிண்டி, கேகே நகர், வடபழனி, தி நகர், கோடம்பாக்கம், ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, மீனம்பாக்கம், வண்டலூர், ஊரப்பாக்கம், ஆதனூர், கூடுவாஞ்சேரி ஆகிய இடங்களில் சூறைக்காற்றுடன் மழை பெய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications