சென்னையில் விடாத கனமழை.. பல இடங்களில் வெள்ளம்.. செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஏரிகளின் நிலை என்ன?
சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியில் 20.48 அடி வரை நீர் இருப்பு உள்ளது. மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வினாடிக்கு 2000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக சென்னையின் பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டு இருக்கிறது. நேற்று பிற்பகலில் லேசாக தொடங்கிய மழை மாலை நேரத்தில் வேகம் எடுத்தது.
அதன்பின் இரவு முழுக்க விடமால் கனமழை பெய்தது. காற்றழுத்த தாழ்வு மண்டலமானது புதுச்சேரி அருகே காரைக்கால் - ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்க உள்ளது. இதனால் சென்னையில் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக சென்னையில் ஏரிகளின் நீர் இருப்பு அதிகரித்துள்ளது.

செம்பரம்பாக்கம்
ஸ்ரீபெரும்புதூர் ஏரி நிரம்பியதால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஸ்ரீபெரும்புதூர் ஏரி 17.60 அடியை எட்டியதால் உபரி நீரானது வினாடிக்கு 235 கனஅடி வெளியேறி வருகிறது. செம்பரம்பாக்கம் ஏரியில் 20.48 அடி வரை நீர் இருப்பு உள்ளது. இதன் முழு உயரம் 24 அடி ஆகும். மழை காரணமாக இங்கு வேகமாக நீர் உயர்ந்து வருகிறது. நேற்று பிற்பகல் இங்கு 840 கன அடி நீர் வரத்து இருந்தது. நீர் வரத்து 5240 கன அடியாக உயர்ந்துள்ளது. மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வினாடிக்கு 2000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

புழல்
கனமழை காரணமாக புழல் ஏரிக்கு நீர்வரத்துத்து அதிகரித்து உள்ளது. புழல் ஏரிக்கு 10 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டு இருக்கிறது. நேற்று 8 அடி ஆயிரம் கன அடி நீர் வரத்து இருந்த நிலையில் இன்று அதிகாலை 10 ஆயிரம் கன அடியாக நீர் வரத்து அதிகரித்துள்ளது. புழல் ஏரியில் இருந்து 3 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்படுகிறது. இது 21.20 அடி உயரம் கொண்ட ஏரியாகும். இங்கு 19.20 அடி வரை தற்போது நீர் உள்ளது.
Recommended Video

பூண்டி
பூண்டி நீர் தேக்கத்திற்கும் நீர் வரத்து அதிகரித்துள்ளது. திருவள்ளூர் பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்திலிருந்து 8,000 கன அடி உபரி நீர் வெளியேறி வருகிறது. அணைக்கு நீர் வரத்து 7973 கன அடியாக உள்ளது. பூண்டி ஏரி திறக்கப்பட்டதால் 20 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. கொசஸ்தலை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் உயரம் 35 அடியாகும். தற்போது 32.73 அடி வரை நீர் நிரம்பி உள்ளது.

சோழவரம்
சென்னையின் மற்ற ஏரிகளிலும் நீர் வேகமாக நிரம்பி வருகிறது. சோழவரத்தில் இருந்து 2015 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் நீர் வரத்து 6737 கன அடியாக உள்ளது. இதன் உயரம் 18.86 அடியாகும். தற்போது 17.90 அடி வரை நீர் நிரம்பி உள்ளது. வீராணம் ஏரியில் இருந்து 809 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. வீராணம் ஏரிக்கு 1431 கன அடி நீர் வரத்து உள்ளது. இதன் உயரம் 8.50 அடியாகும். தற்போது 6.35 அடி வரை நீர் நிரம்பி உள்ளது.












Click it and Unblock the Notifications