மூளையில் சூடோமோனாஸ் கிருமி.. ராமநாதபுரம் சிறுவனின் கை அகற்றம் ஏன்? மருத்துவ அறிக்கை வெளியீடு
சென்னை: ராமநாதபுரத்தை சேர்ந்த ஒன்றரை வயது ஆண் குழந்தையின் கை அகற்றப்பட்டது ஏன் என்பது குறித்து சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை குழுவினர் அறிக்கை வெளியிட்டுள்ளார்கள்.
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தஸ்தகீர் (32). இவருக்கு 1.5 கிலோ எடையில் பிறந்த குறைமாத ஆண் குழந்தை முகமது மகிரினுக்கு இப்போது ஒன்றரை வயதாகிறது. குழந்தைக்கு மூளையில் செரிப்ரோஸ்பைனல் திரவம், நரம்பியல் கோளாறு உள்ளிட்ட பல உடல்நல பிரச்சினைகள் இருந்துள்ளது.

இந்த குழந்தைக்கு கடந்த மாதம் தலையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் கடந்த மாதம் 25 ஆம் தேதி குழந்தையின் தலையில் பொருத்தப்பட்டிருந்த டியூப் இயற்கை உபாதை கழிக்கும் போது வெளியே வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த குழந்தையின் தாய் மீண்டும் ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு கொண்டு வந்தார்.
அப்போது குழந்தையின் உடல்நிலையை கண்காணித்த மருத்துவர்கள் உடனடியாக அறுவை சிகிச்சை செய்தனர். குழந்தைக்கு இரு கைகளிலும் டிரிப்ஸ் ஏற்றப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை கொடுக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 29ஆம் தேதி வலது கையில் டிரிப்ஸ் மூலம் மருந்து செலுத்தியுள்ளனர்.
அப்போது குழந்தையின் கை திடீரென நிறம் மாறத் தொடங்கியது. இதையடுத்து கை முழுவதும் நிறம் மாறிய நிலையில் குழந்தையை உறவினர்கள் நரம்பியல் மருத்துவரிடம் கொண்டு சென்றனர். அப்போது கை அழுகிவிட்டதால் அதை முற்றிலும் அகற்ற வேண்டும் என்றும் இல்லாவிட்டால் உயிருக்கே ஆபத்து என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியிருந்தனர்.
இதையடுத்து அந்த குழந்தைக்கு கடந்த இரு தினங்களுக்கு முன் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தோள் பட்டை முதல் வலது கை அகற்றப்பட்டது. இந்த சம்பவத்திற்கு அரசுமருத்துவமனையின் அலட்சியப்போக்கே காரணம் என்றும் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பலர் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
இந்த நிலையில் குழந்தையின் தாய் அஜிஷா கூறுகையில், கையில் டிரிப்ஸ் போட்டார்கள். கொஞ்ச நேரத்தில் கை விரல் மட்டும் கருப்பானது, உடனே செவிலியரை அழைத்தேன். ஆனால் அவர் உட்கார்ந்திருந்த நாற்காலியை விட்டு கூட எழுந்திருக்கவில்லை. அது ஒன்றும் இல்லை என கூறிவிட்டார். இதையடுத்துதான் குழந்தையின் கை முழுவதும் கருப்பாகிவிட்டது. எனவே மருத்துவர்கள் மீதும் செவிலியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கும் வரை எனது போராட்டம் தொடரும் என தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக குழந்தையை நேரில் சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் 3 பேர் கொண்ட குழு அமைப்பதாகவும், குழந்தையின் சிகிச்சையில் ஏதேனும் அலட்சியம் இருந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். இதுகுறித்து குழந்தையின் பெற்றோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இந்த நிலையில் மருத்துவக் குழு அறிக்கை வெளியாகியுள்ளது. அதில் pesudomonas என்ற கிருமியால் ஏற்படும் மூளைத்தொற்று ரத்த நாளத்தை பாதித்ததால் வலது கையில் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டது. குழந்தைக்கு இரத்தநாள அடைப்பு மருந்தினாலோ, மற்ற சிகிச்சை முறைகளாலோ ஏற்படவில்லை. வென்ஷன் (vention) ஊசியை தமனியில் போடவில்லை என்பது பெற்றோர் மருத்துவர்களின் வாக்குமூலத்தில் உறுதியானது.
குழந்தை அனுமதிக்கப்பட்ட உடனேயே காலதாமதமின்றி அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இரத்த ஓட்டம் பாதித்ததால் குழந்தையின் உயிரைக் காப்பாற்ற வலது கையை அகற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டது. மருந்து கசிவினால் இரத்த ஓட்ட பாதிப்பு ஏற்படவில்லை என்பது உறுதி செய்யப்படுகிறது. குழந்தையின் உயிரை காக்கவே கை அகற்றப்பட்டது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications