அக்னி ஆட்டம்.. சென்னையில் அனல்.. சாலையில் ஆம்லேட் போடலாமா? 3 நாட்களுக்கு தகிக்கப்போகுது..உஷார் மக்களே
சென்னை: அக்னி நட்சத்திர அனலின் தாக்கத்தை தமிழக மக்கள் உணர ஆரம்பித்துள்ளனர். சாலையில் ஆம்லேட் போடும் அளவிற்கு சூரியன் சுட்டெரித்து வருகிறது. இன்னும் சில நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் எனவும் இயல்பை விட 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உயரக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சென்னையில் தொடர்ந்து 3வது நாளாக 106 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
அக்னி நட்சத்திரம் மே 4ஆம் தேதி தொடங்கியது. வருண பகவானின் புண்ணியத்தால் கோடை மழை பெய்யவே நீர் நிலைகளில் தண்ணீர் காணப்படுகிறது. இதனால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளுமையான சூழ்நிலையே காணப்பட்டது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து மோச்சா புயலாக மாறியது. இந்த புயல் வங்கதேசம் - மியான்மர் இடையே கரையைக் கடந்தது. மோச்சா புயல் தமிழகத்தின் வளிமண்டல பகுதிகளில் இருந்த ஈரப்பதம் அனைத்தையும் இழுத்துக்கொண்டதால் தமிழ்நாட்டில் வெப்பம் சுட்டெரித்து வருவதாக வானியல் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் கானல் நீர் ஓடுகிறது. இரவு நேரங்களில் புழுக்கத்தினால் பலரது உறக்கமும் கெடுகிறது.
தமிழ்நாட்டின் 18 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் பதிவானது. தலைநகர் சென்னையில் 3 நாட்களாகவே 106 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகி வருகிறது. சென்னையில் மூன்றாவது நாளாக இன்றும் 106 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. வெப்பம் சதம் அடித்துள்ளது.

நுங்கம்பாக்கம் மற்றும் மீனம்பாக்கம் பகுதியில் 106 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. கடந்த 3 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை நுங்கம்பாக்கத்தில் 106 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. வெப்பத்தை தாக்கு முடியாத சென்னைவாசிகள் மாலை நேரங்களில் காற்று வாங்க கடற்கரைகளில் குவிந்து வருகின்றனர்.
இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு வெப்பம் 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சென்னையில் 106 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் நீடிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிக வெப்பநிலை மற்றும் வெப்ப அழுத்தம் காரணமாக அசவுகரியம் ஏற்படலாம் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், தமிழகத்தின் ஓரிரு பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications