பெண்கள் பாதுகாப்பில் நம்பர் 1 .. நம்ம சென்னையை அடிச்சுக்க ஆள் ஏது?
சென்னை: இந்தியாவிலேயே சென்னைதான் பெண்களுக்குப் பாதுகாப்பான மாநகரம் என்று மீண்டும் உறுதியாகி இருக்கிறது.
தேசிய குற்ற ஆவணக் காப்பக (NCRB) அறிக்கையின்படி, இந்தியாவிலேயே சென்னை மாநகரம்தான் பெண்களுக்குப் பாதுகாப்பானதாக உள்ளது எனத் தெரியவந்துள்ளது.

இந்த அறிக்கையானது காவல்துறையினரால் பதிவு செய்யப்பட்ட புகார் எண்ணிக்கையின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டு ஆண்டு தோறும் வெளியிடப்படும். அதில் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் சார்ந்த புகார்கள் மிகக் குறைவான அளவிலேயே சென்னை மாநகரம் தொடர்பாகப் பதியப்பட்டுள்ளன என்ற தகவல் இப்போது வெளியாகி உள்ளது.
ஆனால், சென்னையுடன் ஒப்பிடுகையில் மும்பை மற்றும் பெங்களூரில் அதிகப்படியான வழக்குகள் பதிவாகியுள்ளன என்று அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதில் இந்தியாவிலேயே டெல்லி முதலிடத்தைப் பிடித்துள்ளது.
ஆயினும், பலவீனமான குற்றப்பத்திரிகைகள், சரியான சாட்சிகள் இல்லாதது மற்றும் ஆதாரங்கள் முறையாக இல்லாமல் இருப்பது என ஆக மொத்தமாக 1,878 வழக்குகள் நிலுவையில் உள்ளன என்று தேசியக் குற்ற ஆவணக்காப்பக அறிக்கையில் இந்தத் தகவல்கள் பட்டியல் இடப்பட்டுள்ளன.

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக நிர்பயா திட்டத்தின் கீழ் பிங்க் கலர் வாகனங்களில் காவலர்கள் ரோந்து வருவது, சிசிடிவி கேமராக்களை முறையாக அமைத்தது, நகர பாதுகாப்பு வசதிகளை முறையாகச் செய்தது எனப் பல்வேறு நடவடிக்கைகளைச் சென்னை காவல்துறை செய்ததன் மூலம் இந்தச் சாதனையைச் சென்னை நகரம் செய்துள்ளது என்பது அறிக்கையின் மூலம் நிரூபணமாகி உள்ளது.
இருந்தபோதிலும், நிர்பயா திட்டத்தின் கீழ் பல திட்டங்கள் இன்னும் முழுமையாக நிறைவேற்றப்படாமல் நிலுவையில் இருப்பதாகவும், பொது இடங்கள், வணிக வளாகங்கள், பள்ளி மற்றும் கல்லூரி போன்ற இடங்களில் அதிகப்படியான பாதுகாப்பு வசதிகள் செய்ய வேண்டி இருப்பதாகவும், அதனால் வழக்குள் அதிகம் பதிவாகாமல் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
காவல்துறையால் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கையின் அடிப்படையை வைத்துப் பார்க்கும்போது, ஆறு பெருநகரங்களில் பெண்களுக்குப் பாதுகாப்பான நகரம் சென்னையே இருப்பதாக அந்த அறிக்கையில் மிகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

தேசியக் குற்றப்பதிவு பணியகம் (NCRB) 2022 அறிக்கை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாகக் கடந்த ஆண்டு 736 வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன் எண்ணிக்கை முந்தைய ஆண்டில் 874 ஆக இருந்தது. தாக்குதல், பாலியல் துன்புறுத்தல், கடத்தல், வரதட்சணைக் கொடுமை, வன்புணர்வு மற்றும் பின்தொடர்தல் ஆகிய குற்ற நடவடிக்கைகள் இதில் அடங்கும்.
மும்பையிலும் பெங்களூரிலும் தலா 3,000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் டெல்லி 14,158 வழக்குகள் பதிவாகி இருக்கும் நிலையில் அம்மாநிலம்தான் தற்போதைக்கு பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களில் முதலிடத்தில் இருக்கிறது.
காணக்கூடிய மற்றும் செயலில் உள்ள காவல், சிசிடிவி கேமராக்கள், முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில், குறிப்பாக வணிக மையங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அருகாமையில் பிங்க் ரோந்துப் பணியை அமைத்தல், மற்றும் சில நடவடிக்கைகள் மற்ற பெருநகரங்களுடன் ஒப்பிடும் போது குறைவான எண்ணிக்கைக்குக் காரணமாகக் கருதப்படுகிறது.

இருப்பினும், பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் தகவல்களைக் கொண்டு மகிழ்ச்சியடைய ஒன்றுமே இல்லை என்றும் 1,878 வழக்குகள் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளன.
2022 ஆம் ஆண்டில் 59 வழக்குகளில் காவல்துறை தண்டனை பெற்றுள்ளது. பலவீனமான குற்றப்பத்திரிகைகள், நேரில் கண்ட சாட்சிகள் பிறழ்வாக மாறியது மற்றும் ஆதாரங்கள் இல்லாதது ஆகியவற்றால் சுமார் 109 வழக்குகளில் விடுதலை பெற்றுள்ளனர்.
இது குறித்து பெருநகர சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், "சென்னையில்தான் காவல்துறையில் அதிக அளவில் பெண்கள் பணியில் உள்ளனர், மேலும் பெண்கள் நம்பிக்கையுடன் தங்கள் புகார்களைப் பதிவு செய்ய முன்வருகின்றனர், இது குற்றவாளிகளை சட்டப்பூர்வமாகத் தண்டிக்க உதவுகிறது. இதுவே காரணம்" என்கிறார்
மேலும், அவர், "முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் ஒரு பகுதியாகப் பெண்களின் பாதுகாப்பிற்காகப் பல கண்காணிப்பு படைகளை அறிமுகப்படுத்தியுள்ளோம். இளஞ்சிவப்பு வாகனங்கள் ரோந்து வருகின்றன.

இத்துடன் நடமாடும் ரோந்தும் நடைமுறையில் உள்ளது. நகரத்தில் கண்காணிப்பை அதிகப்படுத்தியுள்ளோம். இருள் நிறைந்த சாலை பகுதிகளைக் கண்டறிந்து, அங்கே ரோந்துப் பணிகளை மேம்படுத்தியுள்ளோம்" என்கிறார் ரத்தோர்
நிர்பயா நிதி திட்டத்தின் கீழ் 165.8 கோடி செலவில் சில பாதுகாப்பு திட்டங்களைச் சென்னைக் காவல்துறை செயல்படுத்தி உள்ளது. ஆபத்தில் சிக்கித் தவிக்கும் பெண்களை மீட்க உதவும் பிங்க் கலர் வாகன ரோந்து செயல்பட்டு வருகிறது.
சென்னையில் 1,750 இடங்களில் 5,250 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஒரு Cyber Forensics Laboratory செயல்பட்டு வருகிறது. சமூக ஊடகங்களை ஆய்வு செய்வதற்கான கருவி, குற்றச்சம்பவங்கள் நடைபெறும் பகுதிகள் கண்டறியப் பட்டு ஜிஐஎஸ் மேப்பிங் வசதி செய்து தரப்பட்டுள்ளது. இவை எல்லாம் பெண் களை பாதுகாப்பதில் பெரும்பங்கு வகிப்பதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

என்னதான் பெண்கள் பாதுகாப்பில் சென்னை நகரம் சிறப்பாக இடத்தைப் பிடித்திருந்தாலும் சமூக ஆர்வலர்கள் சிலர் பொது இடங்களில் அதிக பாதுகாப்பு தேவைப்படுகிறது என்கின்றனர்.
கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு நிர்பயா திட்டத்தின் கீழ் முன்மொழியப்பட்ட பல திட்டங்கள் இன்னும் செயல்படுத்தப்படாமல் நிலுவையில் உள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.
ஒட்டுமொத்தமாக இந்த அறிக்கையின் அடிப்படையில் பார்த்தால் சைபர் குற்றங்களைப் பொறுத்தளவில் 73 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. அதைப் போன்று கடத்தல் வழக்குகள் சென்னையில் 639 பதிவாகி உள்ளது.

வன்புணர்வு வழக்குகள் 151 பதிவாகி உள்ளன. சீர்குலைக்கும் நோக்கத்துடன் திட்டமிட்டுத் தாக்குதல் நடத்தியது தொடர்பாக வழக்குகள் 757 பதிவாகி உள்ளன.
நமது பக்கத்து மெட்ரோ சிட்டியான பெங்களூருவில் பெண்களுக்கு எதிரான வழக்குகள் மொத்தம் 3,924 பதிவாகி உள்ளது. கொல்கத்தாவைப் பொறுத்தவரை இந்த வழக்குகளின் எண்ணிக்கை 1,890 ஆக உள்ளது. மும்பையில் 6,176 ஆக உள்ளது.












Click it and Unblock the Notifications