விசிக தலைவர் திருமாவளவன் குறித்து அவதூறு.. காயத்ரி ரகுராமிற்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் சம்மன்!
சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை விமர்சித்த விவகாரத்தில் பாஜகவை சேர்ந்த நடிகை காயத்ரி ரகுராம் நேரில் ஆஜராகும்படி சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான டாக்டர் திருமாவளவன் கடந்த 2019ம் ஆண்டு இந்து கோயில்களின் வடிவமைப்புகள் குறித்து பேசியதற்கு எதிராக நடிகை காயத்ரி ரகுராம் டிவிட்டரில் பதிவிட்டிருந்தார்.
திருமாவளவனை கடுமையாக விமர்சிக்கும் வகையில் காயத்ரி ரகுராம் செய்த டிவிட் பெரிய சர்ச்சையானது.

2019
2019ம் ஆண்டு நவம்பர் 18ஆம் தேதி திருமாவளவனை விமர்சிக்கும் வகையில், காயத்ரி ரகுராம் செய்த டிவிட்டிற்கு எதிராக விடுதலை சிறுத்தை கட்டியினரிடம் கடும் எதிர்ப்பலைகளும், கடுமையான விமர்சனங்களும் எழுந்தன. சில இடங்களில் காயத்திரி ரகுராமிற்கு எதிராக போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடந்தன.

காயத்ரி
காயத்ரி ரகுராமை உடனே கைது செய்ய வேண்டும், அவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றெல்லாம் கோரிக்கைகள் வைக்கப்பட்டன. இதையடுத்து விடுதலை சிறுத்தை கட்சியின் சட்டப்பிரிவு துணை செயலாளரான வழக்கறிஞர் ஏ.காசி என்பவர் இது தொடர்பாக உடனே வழக்கு தொடுத்தார்.

களங்கம்
சென்னை சைதாப்பேட்டை 23வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஏ.காசி அவதூறு வழக்கு தாக்கல் செய்தார். அவரது மனுவில், விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை காயத்ரி ரகுராம் வெளியிட்டுள்ளார். சமுதாயத்தில் மதிப்பு கொண்டவர் மீது களங்கம் ஏற்படுத்தம் வகையில் நடிகை காயத்ரி ரகுராம் செயல்பட்டதாக வழக்கு பதியப்பட்டது.

கோரிக்கை
இவர் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை எடுத்து தண்டிக்க வேண்டும் என்று மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது. இந்த மனு சென்னை சைதாப்பேட்டை நீதிமன்ற நீதிபதி கவுதமன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு குறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி நடிகை காயத்ரி ராகுராமுக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை ஜூலை 12ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.












Click it and Unblock the Notifications