சென்னை சங்கமம்.. சம்பளம் எவ்வளவு.. கிராமியக் கலைஞர்களுக்கு இன்ப அதிர்ச்சி தந்த முதல்வர் ஸ்டாலின்
சென்னை: சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா' கிராமியக் கலைஞர்களுக்கு ஒரு நாள் ஊதியம் ரூ.5000 ஆக உயர்த்தி முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சியில் தற்போது 1500 கிராமியக் கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர். இவர்கள் 75 கலைக் குழுக்களாக பிரிந்து 50 வெவ்வேறு கலை வடிவங்களை நிகழ்த்தி வருகின்றனர். இவர்கள் இந்த அறிவிப்பால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னையில், தை மாதம் தொடக்கத்தில் பொங்கல் நாள்களில் சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா என்ற பிரம்மாண்ட கலைவிழா கடந்த மூன்று ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. நான்காவது ஆண்டாக இந்த ஆண்டின் சங்கமம் கலை நிகழ்ச்சிகளை சென்னையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் 13.1.2025 அன்று கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் ஆலயத் திடலில் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாட்டின் முன்னணி கலைஞர்களுடன் 200 கிராமிய கலைஞர்களும் இணைந்து நடத்தும் மாபெரும் இசை, நடன நிகழ்ச்சிகள் நடந்தது.

சென்னை சங்கம் நிகழ்ச்சி என்பது பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை, திருவான்மியூர் கடற்கரை, சென்னை இசைக்கல்லூரி வளாகம், திருவல்லிக்கேணி பாரத சாரண சாரணியர் திடல், கிண்டி கத்திபாரா வளாகம், சைதாப்பேட்டை மாநகராட்சி விளையாட்டுத் திடல், தியாகராயநகர் நடேசன் பூங்கா, நுங்கம்பாக்கம் விளையாட்டு மைதானம், எழும்பூர் அருங்காட்சியகம், கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் ஆலயத்திடல், ராயபுரம் ராபின்சன் பூங்கா, பெரம்பூர் முரசொலி மாறன் பூங்கா, அண்ணாநகர் கோபுர பூங்கா, கோயம்பேடு ஜெய் நகர் பூங்கா, கே.கே.நகர் சிவன் பூங்கா, வளசரவாக்கம் லேமேக் பள்ளி வளாகம், கொளத்தூர் மாநகராட்சித் திடல், அம்பத்தூர் எஸ்.வி. விளையாட்டுத் திடல் ஆகிய 18 இடங்களில் நேற்று முதல் நடந்து வருகிறது. வரும் 17ம் தேதி வரை நான்கு நாள்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சி, மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை கலைவிழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழாவில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் தேர்வு செய்யப்பட்டுள்ள 1500 க்கும் மேற்பட்ட கலைஞர்கள் நையாண்டி மேளம், கரகாட்டம், காவடியாட்டம், புரவியாட்டம், இறை நடனம், தப்பாட்டம், துடும்பாட்டம், பம்பையாட்டம், கைசிலம்பாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம், சேவையாட்டம், கோலாட்டம், ஜிக்காட்டம், ஜிம்பளா மேளம், பழங்குடியினர் நடனம், சிலம்பாட்டம், மல்லர் கம்பம், வில்லுபாட்டு, கணியன் கூத்து, தெருக்கூத்து, பாவைக்கூத்து, தோல்பாவைக்கூத்து, நாடகம், கிராமிய ஆடல், பாடல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுடன் சென்னையின் புகழ்பெற்ற செவ்வியல் மற்றும் மெல்லிசை கலைஞர்கள் ஆகியோரும் கலை நிகழ்ச்சிகளும் நடந்து வருகிறது. தமிழ்நாட்டின் பாரம்பரியத்தையும், பண்பாட்டினையும் வெளிப்படுத்தும் நமது நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு ஒரு நாள் ஊதியம் ரூ.5000 ஆக உயர்த்தி முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில், "முதல்வர் ஸ்டாலினின் உத்தரவுக்கு இணங்க தமிழ்ப்பண்பாட்டை வளர்க்கும் 'சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா' நிகழ்ச்சி கடந்த மூன்று ஆண்டுகளாக வெற்றிகரமாக நடந்து முடிந்ததையடுத்து, இந்தாண்டிற்கான சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சியினை ஜன. 13 ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் வைத்தார். சென்னையில் உள்ள 18 இடங்களில் நான்கு நாள்கள் நடைபெறும் இந்நிகழ்ச்சி பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சியில் தற்போது 1500 கிராமியக்கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர். இவர்கள் 75 கலைக் குழுக்களாக பிரிந்து 50 வெவ்வேறு கலை வடிவங்களை நிகழ்த்தி வருகின்றனர். சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழாவில் பங்குபெறும் கிராமியக் கலைஞர்களுக்கு தங்கும் இடம், உணவு, 2 உடைகள், போக்குவரத்து வசதிகள் உட்பட அனைத்தும் தமிழ்நாடு அரசால் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது . இது தவிர அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஒரு நாள் ஊதியம் ரூ.5000 ஆக உயர்த்தி வழங்க முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்" இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications