தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்?.. சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் குவிந்த 500 போலீஸ்
சென்னை: சென்னை மாநகராட்சியின் 2 மண்டலங்களில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்கும் தீர்மானத்தை ரத்து செய்யக் கோரி தூய்மைப் பணியாளர்கள் ஏற்கனவே 13 நாட்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து, இன்று காலை 9 முதல் 10 மணியளவில் தூய்மைப் பணியாளர்கள் மீண்டும் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடவுள்ளதாக தகவல் வெளியானது. இதைத்தொடர்ந்து, சென்னை ரிப்பன் மாளிகையில் 500க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை மாநகராட்சியில், 5, 6 ஆகிய இரண்டு மண்டலங்களில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்குவதற்கு மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஆயிரத்துக்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு தரப்பில் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு எட்டப்படவில்லை. இதைத்தொடர்ந்து நீண்ட போராட்டத்தை தொடங்கினர். ஏற்கனவே 13 நாட்கள் போராட்டம் நடத்தப்பட்டது.

இதையடுத்து, உடனடியாக போராட்டத்தைக் கலைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்ட நிலையில் கடந்த ஆகஸ்ட் 13 ஆம் தேதி நள்ளிரவன்று தூய்மைப் பணியாளர்கள் கைது செய்யப்பட்டனர். போராட்டம் தொடர்பாக பெரியமேடு மற்றும் வேப்பேரி காவல் நிலையத்தில் 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. அதற்கு அடுத்த நாளே தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் வெற்றி என தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு, தூய்மைப் பணியாளர்களுக்கு விருந்து வைக்கப்பட்டது.
ஆனால், தூய்மைப் பணியாளர்கள் இந்த கோரிக்கையை கைவிடப் போவதில்லை என்றும், போராட்டம் தொடரும் என்று தெரிவித்தனர். இந்நிலையில், இன்று காலை 9 முதல் 10 மணியளவில் தூய்மைப் பணியாளர்கள் மீண்டும் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடவுள்ளதாக தகவல் வெளியாகியது. இதைத்தொடர்ந்து, சென்னை ரிப்பன் மாளிகையில் 500க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை ரிப்பன் மாளிகையில் 5 துணை ஆணையர்கள் தலைமையில் 500 காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். தூய்மைப் பணியாளர்களை கைது செய்ய ஏதுவாக காவல் ரோந்து வாகனங்கள், மாநகரப் பேருந்துகள் தயார் நிலையில் உள்ளன.












Click it and Unblock the Notifications