பெண்களை வேட்டையாடும் பயங்கரவாதம்.. மரண தண்டணை தான் தீர்வு.. மாணவி கொலையால் கொதித்த காயத்ரி ரகுராம்
சென்னை: சென்னையில் ஒரு தலைக்காதலால் கல்லூரி மாணவியை ரயிலுக்குள் தள்ளி படுகொலை செய்த வழக்கில் கைதான நபருக்கு மரண தண்டனை வழங்க வேண்டும். பெண்களை வேட்டையாடும் பயங்கரவாதத்தை விட்டுவிடக்கூடாது என பாஜகவை சேர்ந்த நடிகையான காயத்ரி ரகுராம் ஆக்ரோஷமாக கூறியுள்ளார்.
சென்னை ஆலந்தூர் ராஜா தெரு போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தவர் மாணிக்கம் (வயது 47). இவரது மனைவி ராமலட்சுமி (43). இந்த தம்பதியின் மகள் சத்தியப்பிரியா (20).
இதில் ராமலட்சுமி ஆதம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் குற்றப்பிரிவு ஏட்டாக பணியாற்றி வருகிறார். மாணிக்கம் கால் டாக்ஸி ஓட்டி வந்த நிலையில் சத்தியப்பிரியா சென்னை தியாகராயநகரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார்.

ரயிலில் தள்ளி மாணவி கொலை
மாணவி சத்தியப்பிரியா தினமும் ரயிலில் கல்லூரி சென்று வருவதை வாடிக்கையாக வைத்திருந்தார். நேற்று சத்தியப்பிரியா பரங்கிமலை ரயில் நிலையத்துக்கு சென்றார். அப்போது அவரிடம் தகராறில் ஈடுபட்ட மர்மநபர் வேகமாக வந்த ரயிலுக்குள் தள்ளி விட்டார். இதில் ரயிலின் அடியில் சிக்கிய சத்தியப்பிரியா உடல் நசுங்கி இறந்தார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

வாலிபர் கைது
மேலும் கொலை செய்த பிறகு கொலையாளி அங்கிருந்து ஓடிவிட்டார். அவரை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது சென்னை கிண்டியை அடுத்த ஆதம்பாக்கத்தை சேர்ந்த சதீஷ் (23) என்பவர் மாணவி சத்தியப்பிரியாவை கொலை செய்தது தெரியவந்தது. இவர் ஒருதலையாக அவரை காதலித்ததும், மாணவியிடம் தகராறில் ஈடுபட்டு ரயிலுக்குள் தள்ளி கொன்றதும் தெரியவந்தது. இதையடுத்து சென்னை துரைப்பாக்கத்தில் பதுங்கிய சதீசை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்திய போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி 15 நாள் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைத்தனர்.

தந்தை தற்கொலை செய்த சோகம்
இதற்கிடையே மகள் சத்தியப்பிரியா இறந்த சோகத்தில் அவரது தந்தையான மாணிக்கம் விஷம் குடித்து தற்கொலை செய்தார். ஒரு நாளில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பேர் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மகள் சத்தியப்பிரியா, கணவர் மாணிக்கம் ஆகியோரின் உடல்களை பார்த்து ராமலட்சுமி கதறி அழுதது கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது. சத்தியப்பிரியா, மாணிக்கம் ஆகியோரின் உடல்கள் இன்று பிரேத பரிசோதனைக்கு பின்பு இறுதி சடங்குகளுடன் தகனம் செய்யப்பட்டன. இதில் ஏராளமானவர்கள் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.

கொலையாளிக்கு கிளம்பும் எதிர்ப்பு
இதற்கிடையே தான் இந்த சம்பவத்துக்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். மாணவிகளை கொலை செய்தவருக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். மேலும் இன்று நீதிமன்றத்துக்கு கொலையாளி சதீசை போலீசார் அழைத்து வந்தபோதும் கூட வழக்கறிஞர்கள், பொதுமக்கள் அவரை தாக்க முயன்றனர். இந்நிலையில் காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தூக்கில் போட வேண்டும்
இதுதொடர்பாக காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில், ‛‛தாய் வலியுடனும், இழப்புடனும் தனியாக இருக்கிறார். கண்ணீருக்கு யாராலும் பதில் சொல்ல முடியாது. நீதி வேண்டும். அது அம்மாவுக்கு போதாது. பெண்களை வேட்டையாடும் பயங்கரவாதத்தை விட்டுவிடக்கூடாது. மகள் மற்றமு் தந்தையின் உயிரை பறித்த கொலைகாரன் தண்டிக்கப்பட வேண்டும். மரண தண்டனை வழங்க வேண்டும். ஜாமீன் வழங்கக்கூடாது. இது எனது வேண்டுகோள்'' என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications