குழந்தைகள் என்ஜாய் பண்ண சூப்பர் ஸ்பாட்.. சுற்றுலாத் தலமாக மாறும் சென்னை கிளிகள் வீடு
சென்னை: பறவை மனிதர் சுதர்சனின் வீட்டு மாடியில் ஆயிரக்கணக்கான கிளிகள், சிட்டுக் குருவிகள் வந்து நெல், அரிசி, குருணைகளை உண்டு செல்கின்றன. இந்நிலையில், இந்த பறவை இல்லத்தை அனைவரும் பார்வையிடும் வகையில் சுற்றுலாத் தலமாக மாறவுள்ளது.
சென்னை, சிந்தாதிரிப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பறவை மனிதர் சுதர்சன். இவரும், இவரது மனைவியும் இணைந்து ஆயிரக்கணக்கான கிளிகளுக்கும், குருவிகளுக்கும் தினந்தோறும் உணவளித்து வருகின்றனர் சுதர்சன் இந்தப் பறவைகளுக்கு குறுணை, நெல், அரிசி என பல்வேறு வகை உணவு வகைகளை தினந்தோறும் வழங்கி வருகிறார்.

கிளிகளுக்கு 60 கிலோ அரிசியும், சிட்டுக் குருவிகளுக்கு 2 கிலோ அரிசியையும் தினமும் வைத்து வருகிறார். தனது வருமானத்தில் வரும் 80 சதவீதப் பணத்தை இந்தக் கிளிகளுக்கும், குருவிகளுக்குமே செலவிட்டு வருகிறார் சுதர்சன். சுதர்சனின் மனைவி வித்யாவும் பறவைகளுக்கு உணவளிக்கும் பணியை இவருடன் சேர்ந்து செய்து வருகிறார்.
சிந்தாதிரிப்பேட்டையில் இவர்கள் வீட்டின் அருகே ஓடையும், நிறைய மரங்களும் இருப்பதோடு அமைதியான பகுதியாகவும் உள்ளதால் இங்கு கிளிகள் தினமும் வந்து உணவு சாப்பிட்டு செல்கின்றன. ஏற்கனவே ஆயிரக்கணக்கான கிளிகள் மூலம் நமக்கு தெரியவந்த இந்த பறவை மனிதர், தற்போது நடிகர் கார்த்தி நடிப்பில் வெளிவந்துள்ள மெய்யழகன் படத்தின் மூலம் மீண்டும் லைம் லைட்டிற்கு வந்துள்ளார்.
இயற்கையை விட்டு வெகுதூரம் சென்றுவிட்ட நமக்கு ஆயிரக்கணக்கான கிளிகளையும், குருவிகளையும் காணும் வகையில் இந்த பறவைகள் இல்லம் தற்போது சுற்றுலாத் தலமாக மாறவுள்ளது. நடிகர் கார்த்தி, அரவிந்த சாமி நடிப்பில் வெளியாகிய மெய்யழகன் படம் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது
இயக்குநர் பிரேம்குமார் இயக்கத்தில் வெளியான இப்படத்தை 2டி நிறுவனம் சார்பில் நடிகர் சூர்யாவும், நடிகை ஜோதிகாவும் தயாரித்திருந்தனர். அக்டோபர் 27 ஆம் தேதி வெளியான இந்த படத்துக்கு கேரளத்தில் நல்ல வரவேற்பு இருந்தது. இந்தப் படம் ரூ. 40 கோடிக்கு மேல் வசூலித்ததாக தெரிகிறது. இந்த படத்தில் அரவிந்த் சாமி கிளிகளை வளர்த்து வரும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
சென்னை சிந்தாதிரிபேட்டையில் உள்ள சுதர்சனின் வீட்டில்தான் மெய்யழகன் படத்தின் ஷுட்டிங் நடந்தது. தற்போது இந்த பறவைகள் வீட்டின் உரிமையாளரான சுதர்சன், வித்யா தம்பதி இந்த வீட்டை சுற்றுலா தலமாக மாற்றவுள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில், ஒரு நாளைக்கு 25 நபர்கள் மாலை 4.30 மணிக்கு மேல் இலவசமாக கிளிகளைப் பார்வையிடும் வகையில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.












Click it and Unblock the Notifications