செங்கல்பட்டு சாலையில் பஸ் ஓட்டுநர்கள் கவனிக்கவே முடியாத ட்விஸ்ட்.. பொத்தேரி சிக்னல் சொல்லும் பாடம்
சென்னை: சென்னையை அடுத்த காட்டாங்குளத்தூரில் உள்ள பொத்தேரியில் எஸ்ஆர்எம் மருத்துவமனை இருக்கிறது. இந்த பகுதியில் சாலை மற்றும் ரயில் தண்டவாளத்தை கடப்பதற்காக சிக்னல் ஒன்று உள்ளது. இதில் பகலில் வேலை செய்யும். இரவு 10 மணிக்கு மேல் இயங்காது. மஞ்சள் விளக்கு விட்டு விட்டு எரிந்து எச்சரிக்கும். நேற்று இரவு அரசு பேருந்து ஓட்டுநரின் ஒரு தவறு, இருசக்கர வாகனத்தில் வந்தவர்களுக்கு இறுதி நாளாகியிருக்கும்.. நல்ல வேளையாக அப்படி நடக்கவில்லை என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
சென்னை தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு வரை உள்ள பகுதிகளில் தான் இரும்பலியூர், பெருங்களத்தூர், வண்டலூர், கிளாம்பாக்கம், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும். கூடுவாஞ்சேரியை கடந்தால் தான் வாகனங்கள் விரைவாகவே போக முடியும்.

அதேநேரம் கூடுவாஞ்சேரியை கடந்தாலும், பொத்தேரி, காட்டாங்குளத்தூர், மறைமலைநகர், சிங்கப்பெருமாள் கோவில், மகேந்திரா சிட்டி என பரனூர் வரை அடுத்தடுத்து 2 கிலோ மீட்டர் அல்லது ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு முறை சிக்னல்கள் இருக்கும். இந்த சாலைகள் சர்வீஸ் சாலைகளுடன் தான் இருக்கும். உள்ளூர் வாகனங்கள் அந்த சாலைகளில் சென்றுவிடும் என்றாலும், சிக்னலில் கிராஸ் செய்யும் வாகனங்களின் எண்ணிக்கை ஒவ்வொரு சிக்னலிலும் அதிகமாகவே இருக்கும்.
அந்த வகையில் பொத்தேரி சிக்னல் மிக முக்கியமான சிக்னலாக இருக்கிறது. இங்குள்ள எஸ்ஆர்எம் கல்லூரியில் ஏராளமான மாணவ மாணவியர் படிக்கிறார்கள். சுற்றியுள்ள பகுதிகளில் தங்கிருந்தும் பலர் படிக்கிறார்கள். இதேபோல் ஐடி ஊழியர்கள் பலர் இந்த பகுதிகளில் தங்கி, கூடுவாஞ்சேரி, பெருங்களத்தூர், மகேந்திர சிட்டி பகுதிகளில் உள்ள ஐடி நிறுவனங்களில் வேலைக்கு சென்று வருகிறார்கள். இதேபோல் மறைமலைநகர், சிங்கப்பெருமாள் கோவில் பகுதிகளில் உள்ள ஏராளமான தொழில் நிறுவனங்களில் பணியாற்றுவோரும் காட்டாங்குளத்தூர் பகுதிகளில் அதிகமாக தங்கி உள்ளனர்.
பொதுவாகவே சென்னை ஜிஎஸ்டி சாலையில் இரவு 10 அல்லது 11 மணிக்கு மேல் சிக்னல்கள் வேலை செய்யாது. மஞ்சள் விளக்கு விட்டு விட்டு எரிந்து எச்சரிக்கும். இங்கு சிக்னலில் நிற்கும் இருசக்கர வாகனங்கள், கார்கள், மிக கவனமாகவே கிராஸ் செய்ய வேண்டும். சில நேரங்களில் சிக்னல் வேலை செய்யவில்லை என்றால், இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் நீண்ட நேரம் கிராஸ் செய்யவே முடியாது. இரவு நேரங்களில் வாகனங்கள் அதிவேகமாக வந்து செல்கின்றன.
நேற்று இரவு பொத்தேரி சிக்னலில் அதிக வாகனங்கள் கிராஸ் செய்ய முயன்றன. அப்போது ஒருகட்டத்தில் தனியார் பேருந்து ஒன்று இடதுபக்கம் நின்றது. இதனால் பேருந்தை கடந்து இருசக்கர வாகன ஓட்டிகள் செல்ல முயன்றனர். அதை கவனிக்காத அரசு பேருந்து ஓட்டுநர், வலது பக்கம் கேப் இருக்கிறது என்று வேகமாக பயணிக்க முயன்றார். அப்போது தான் இருசக்கர வாகன ஓட்டியும் முன்னே ஏறி சென்றார். நல்லவேளையாக ஒரு அடி தள்ள பார்த்த டிரைவர் சட்டென பிரேக் போட்டார். அப்படியே குலுங்கி பேருந்து ஸ்டென்னாகி நின்றது. கொஞ்சம் பேருந்து இழுத்து சென்றிருந்தால், இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு கல்லூரி மாணவர்களுக்கு அதுதான் இறுதி நாளாகி இருக்கும்.
பொதுவாகவே முன்னால் வாகனங்கள் இருப்பதை கண்டு பின்னால் வரும் வாகன ஓட்டிகள் பிரேக் பிடிப்பார்கள். சிலர் மட்டும் முட்டாள்தனமாக கேப் இருக்கிறது.. யாரும் வரவில்லை என்று நினைத்து முந்தி செல்ல முயல்வார்கள்.. அப்படிப்பட்ட சமயங்களில் தான் விபத்துக்கள் ஏற்படுகின்றன. அப்படியான விபத்தில் சிக்காமல் இருக்க இருசக்கர வாகன ஓட்டிகளுமே பொறுமையாக சாலை முழுமையாக வாகனங்கள் நின்ற பிறகு சிக்னலை கிராஸ் செய்யலாம். மாறாக அவசரப்பட்டால், எமன் என்ட்ரியாகி விடுவார் என்பது தான் யதார்த்தமாகும்.















Click it and Unblock the Notifications