மோசமான நிலைமை.. சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை இன்றும் ரத்து! தீராத மழை வெள்ள பிரச்சனை
சென்னை: சென்னையில் இன்று 3வது நாளாக புறநகர் மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்று புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும் என நேற்று தெரிவிக்கப்பட்ட நிலையில் இன்று திடீரென்று ரத்து என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதற்கான காரணம் வருமாறு:
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் டிசம்பர் 3ம் தேதி இரவு முதல் நேற்று முன்தினம் வரை கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் சென்னை நகர் முழுவதுமே தண்ணீரில் மூழ்கியது. சாலைகளிலும், குடியிருப்பு பகுதிகளையும் மழை நீர் சூழ்ந்தது.

இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். அவர்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் முடங்கினர். பல இடங்களில் மீட்பு படையினர் பொதுமக்களை படகுகள் மூலம் மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைத்துள்ளனர். தற்போது புயல் கரையை கடந்த நிலையில் சென்னையில் நேற்று முதல் மழை என்பது இல்லை.
இதற்கிடையே தான் சென்னையில் முழுவீச்சில் மழை வெள்ளத்தை வெளியேற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இருப்பினும் இன்று காலை வரை பல இடங்களில் மழை வெள்ளம் என்பது வடியவில்லை. இதற்கிடையே தான் சென்னையில் பெய்த கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக புறநகர் மின்சார ரயில் சேவை என்பது நேற்று முன்தினமும், நேற்றும் ரத்து செய்யப்பட்டது.
தண்டவாளங்களில் மழை நீர் குட்டை போல் தேங்கியதால் ரயில்களை இயக்க முடியவில்லை. இதனால் இந்த ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டது. இதற்கிடையே தண்ணீரை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வந்தது. இதையடுத்து இன்று சென்னை புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படும் என நேற்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் இன்று காலையிலும் தண்டவாளத்தில் பல இடங்களில் தண்ணீர் என்பது உள்ளது.
இதையடுத்து இன்று 3வது நாளாக சென்னை புறநகர் மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதாவது இன்றைய தினம் சென்னை புறநகர் மின்சார ரயில் 30 நிமிடம் முதல் ஒரு மணிநேர இடைவெளியில் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் நிலைமை என்பது இன்னும் சரியாகவில்லை.
இதனால் சென்னை எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, சென்னை கடற்கரை, திருவள்ளுர், அரக்கோணம், திருவொற்றியூர், கும்மிடிப்பூண்டி வேளச்சேரி, சிந்தாதிரிபேட்டை வழித்தடங்களில் மின்சாரம் ரயில்கள் இன்று இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் தண்ணீரின் அளவு குறையும் பட்சத்தில் மீண்டும் ரயில் சேவை தொடங்கும் என ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications